Saturday, December 29, 2007

பிரதமருக்கு கோவணாண்டி குமுறல் கடிதம்

"மானியத்துல மண் அள்ளிப் போட்டுடாதீங்க!''
பிரதமருக்கு கோவணாண்டி குமுறல் கடிதம்

மாண்புமிகு பாரத பிரதமர் மன்மோகன் சிங் அய்யா அவர்களுக்கு, கோவணாண்டியின் கோடானுகோடி வணக்கமுங்க!

'மானியமும், மக்கள் நலத்திட்டத்துக்கு ஒதுக்கப்படுற பணமும் போய்ச்சேர வேண்டியவங்களுக்கு சேர்றதில்ல. வழியிலயே ஆட்டயப் போட்டுடறாங்க'னு சும்மா நெத்தியடியாச் சொல்லி அசத்திப்புட்டீங்க போங்க.

''அட நாப்பது, அம்பது வருஷமா இதைத்தான நாங்களும் சொல்லிக்கிட்டு இருக்கோம். அப்பல்லாம் தெரியாத உண்மைய, இப்ப எப்படீடா கண்டுபிடிச்சுது இந்த 'சிங்'கக்குட்டினு... நம்ம ஊருக்காட்டுப் பயலுக சிலபேரு நக்கல் அடிச்சிக்கிட்டு திரியறானுங்க. 'இதுக்கும் அமெரிக்காக்காரனோட ராக்கெட் ஏதாச்சும் 'சிங்'கத்துக்கு உதவி யிருக்கும்'னு அநியாயத்துக்கும் அவனுங்க லொள்ளு பண்ணுறானுங்க.



அய்யா மகாகனம் பொருந்திய பிரதமரே, 'ஐயோ திருடன்.. ஐயோ திருடன்'னு சத்தம்போட்டா, அதை காதுல வாங்கிக்கிட்டு, 'ஐயோ திருடன்... ஐயோ திருடன்'னு ஏட்டய்யாவும் சேர்ந்துகிட்டு கூப்பாடு போட்டா எப்படியிருக்கும். அந்தக் கதையால்ல இருக்கு நீங்க கூப்பாடு போடுறது. நீங்கதான் இந்த நாட்டோட தலைமை மந்திரி. நீங்கதானே களவானித்தனங்களைக் கண்டுபிடிச்சி தண்டிக்கணும். ஆனா, நீங்களும்ல 'திருடன்... திருடன்...'னு கூப்பாடு போடுறீங்க.

சிவாஜி நடிச்ச 'தங்கப்பதக்கம்' படத்துல, 'அந்த தெய்வமே கலங்கி நின்னா, யாரால மாமா ஆறுதல் சொல்லமுடியும்'னு ஒரு ஃபேமஸான ஒரு வசனம் வரும். அதுதான்ங்க இப்ப ஞாபகத்துக்கு வருது.

ஏழை, பாழைகளுக்கும், கோவணாண்டிகளான விவசாயிகளுக்கும் அரசாங்கத்தால அஞ்சு பைசா கூட பிரயோஜனம் இல்லைங்கிறது ஊரறிஞ்ச உண்மை... உலகறிஞ்ச உண்மை. அது மானியமா இருந்தாலும் சரி... மண்ணாங்கட்டியா இருந்தாலும் சரி.

''தேனெடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பானா?''னு நம்ம 'திராவிடத்தம்பி'ங்க வேற அதுக்கு நல்லாவே சப்பைக்கட்டு கட்டுவாங்க. இப்பல்லாம் மொத்தத் தேனையும் குடிச்சி முடிச்சிட்டு, புறங்கையையும் கூட தேனெடுக்கறவங்களே நக்கி முடிச்சிடறாங்க. இப்படி மொத்தத்தையும் முழுங்கற வேலை ஒழுங்கா நடக்குதானு பார்க்கறதுதானே நம்ம மக்கள் பிரதிநிதிங்க பலபேரோட முழுநேர வேலையா இருக்கு. இதெல்லாம் உங்களுக்கு தெரியாம இருக்காது. ஆனாலும், 'திடுதிப்'புனு மானிய விஷயத்தை நீங்க கையில எடுத்திருக்கிறதுதான் சந்தேகத்தைக் கிளப்பிவிடுது.

அமெரிக்காவுல ஒரு நாளைக்கு மொத்தமா ஒரு பில்லியன் டாலரை, விவசாயிகளுக்கு நேரடி மானியமாவே கொடுக்கறாங்க. 'ஒரு கிலோ பருத்திக்கு ஒரு டாலர், ஒரு கறவை மாட்டுக்கு தினமும் 3 டாலர்'னு மானியத்தை அள்ளி கொடுக்கிறாரு உங்க பெரிய அண்ணன் புஷ். நீங்களோ, 'ஆடு நனையுதுனு ஓநாய் அழுத' கணக்கா... 'மானியத்தை திருடுறாங்க... மானியத்தை திங்கறாங்க'னு சொல்லிக்கிட்டே, ஒரேயடியா எல்லாத்தையும் நிறுத்திப்புடலாம்னு சதி வேலையில இறங்கிட்டீங்களோனு ஒரே யோசனையா இருக்கு.

உங்க பாஸ்... அதான் உலக வங்கிகிட்ட நீங்க புதுசா ஏதாவது கடன் கேட்டு, அதுக்கான நிபந்தனையா, 'மானியத்தையெல்லாம் நிறுத்து'னு ஏதாவது உள்ளடி வேலைக்கு தூபம் போட்டிருக்குமோனு கவலையா இருக்கு.

சரி, பாவப்பட்ட மக்களோட கையில உரிய வகையில மானியம் போய்ச்சேர வழி செய்யப்போறீங்களா... இல்ல மானியத்தைக் கூண்டோட நிறுத்தப் போறீங்களா?னு கொஞ்சம் தெளிவா சொல்லிப்புடுங்க. ஏன்னா, நீங்கள்லாம் வெளிநாட்டுக் கம்பெனிக் காரனுங்களுக்கு கதவைத் திறந்து விடறதுல குறியா இருக்கீங்க. கதவைத் திறந்துவிட்டா கூட யாராவது நம்மூரு நல்லவங்க அடைச்சுப் புடுவாங்களோனு, வாசல்ல இருக்கற நிலையையும் சேர்த்தே பேத்து எடுத்துப்புடுவீங்களோனு பயமா இருக்கு.

ஒரு பக்கம் மானியத்துல மண் அள்ளிப்போடறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டு, இன்னொரு பக்கம் இறக்குமதிங்கற இடியையும் தலையில இறக்கறீங்க. எண்ணெய், பருப்பு கோதுமைனு ஆரம்பிச்சி, இப்ப நெல்லு தலைவாசல்ல காத்துக்கிட்டு இருக்குது. போன வருஷத்துல 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உணவு தானியத்தை இறக்குமதி செஞ்சு இருக்கீங்க. இருந்தும், இந்தியாவுல 47% மக்கள் வயிறாற ஒரு வேளை கூட சாப்பிட முடியாம, பாதி பட்டினியோட படுக்கைக்கு போறதா ஜ.நா. உணவுப் பிரிவு ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வாசிக்குது. நீங்க என்னடானா, விவசாயித்துறையில 1.7% அளவுல இருந்த ஜீ.டி.பி 3.7% அளவுக்கு தாண்டிக் குதிக்குதுனு 'தையாத்தக்கா' ஆட்டம் காட்டறீங்க.

''இந்தியாவோட உணவு உற்பத்தியை எடுத்துக்கிட்டா, ஒரே ஒரு முறைதான் 212 மில்லியன் டன் அளவை தொட்டிருக்கு. இப்ப 170 மில்லியன் டன்னுல இருந்து 180 மில்லியன் டன்னுக்குள்ளேயே நொண்டி அடிச்சுக்கிட்டு இருக்குது. தனி ஒரு மனுஷனோட சாப்பாட்டை எடுத்துக்கிட்டா, ஒரு வருஷத்துக்கான உலக சராசரி 309 கிலோ. இந்தியாவுல 95-ம் வருஷம் மட்டும் 207 கிலோவை தொட்டுச்சி. இப்ப 2007-ல 186 கிலோவைத் தொட்டு 'சாதனை' புரிஞ்சிருக்கு''னு வெவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க. இதைக் கேக்கறதுக்கே கேவலமா இல்லீங்களா..?

'அட இதுக்கெல்லாம் கேவலம் பார்த்தா, பிரதான் மந்திரியா இருக்கமுடியுமா'னு நீங்க முணுமுணுக்கறது நல்லாவே கேக்குது.

நம்ம நிதி அமைசர் சிதம்பரம் அய்யா, ஒரே ஒரு வார்த்தையை மட்டும் திரும்பத்திரும்ப முனகிக்கிட்டே இருக்கறாராம். அந்தக் கெரகம் பிடிச்ச எங்க ஊரு இங்கிலீஷ் வாத்தியாரு அதைச் சொல்லிக்கிட்டே இருந்தாரு. ஆனா, சமயம் பார்த்து மறந்துபோச்சி. ஆங்... ஞாபகம் வந்துடுச்சி. 'இன்குளூசிவ்' (மிஸீநீறீusவீஸ்மீ). அதாவது, அணைச்சுக்கிட்டு, இணைச்சுக்கிட்டு வளரணும்னு சொல்றாராம் சிதம்பரம்.

ஆனா, எந்தக் கம்பெனி முதலாளியும், கோவணாண்டிகளைக் கிட்டக்கூட சேர்த்துக்கிறதே இல்லீங்களே. எக்ஸ்குளூசிவ் (ணிஜ்நீறீusவீஸ்மீ) தானுங்களே பண்ணுறாங்க. விவசாயிகளை, விவசாயத்தை விட்டு வெளியேத்துறாங்க. சிறுகுறு வியாபாரிங்கள, வியாபரத்தை விட்டு வெளியேத்துறாங்க. கைவினைத் தொழில்கள முடக்கிட்டு, தொழிலாளர்கள விரட்டியடிக்கறாங்க. விளைநிலங்களை பிடுங்கிக்கிட்டு, மக்களை ஊரைவிட்டே வெளியேத்துறாங்க.

ஆகக்கூடி எந்தக் கம்பெனியும் மக்களை இப்ப அணைச்சிக்கறதும் இல்ல, இணைச்சுக்கிறதும் இல்லீங்க. மக்களோட கஷ்டத்தைப் பார்த்துட்டு... மாவோயிஸ்ட்டுங்க... நக்ஸலைட்டுங்க தான் இப்ப மக்களோட கைகோத்துக் கிட்டிருக்காங்க. இப்போதைக்கு 15 மாநிலங்கள்ல நக்ஸலைட்டுங்கதான் இயங்கிக் கிட்டிருக்காங்க. உங்க ஆட்சி முடியறதுக்குள்ள இந்தியா முழுக்கவே நக்ஸலைட்டுகள பரப்பாம விடமாட்டீங்க போல இருக்கு.

கிரிக்கெட்டுக்கு கோச்சு தேடுற முனைப்புல ஒரு பங்கு கூட விவசாயிகளோட வேதனைகளை களையறதுக்கு காட்டுறது இல்லீங்க உங்க விவசாயத் துறை மந்திரி சரத் பவார். அப்படி இருக்கும்போது, பாவப்பட்ட ஜனங்க நக்ஸலைட்டு களோட சேராம என்ன பண்ணுவாங்க?

ஒரு குவிண்டால் கோதுமைக்கு 1,000 ரூபாய் கொடுத்தும் கூட வடக்கத்திய விவசாய நண்பர்கள், கோதுமை விவசாயத்துல அதிகம் நாட்டம் காட்டலீங்க. 'வெளிநாட்டு விஷக் கோதுமையை குவிண்டால் 1,600 ரூபாய்னு இறக்குமதி பண்ணுவாங்க. நாம உற்பத்தி பண்ற நல்ல கோதுமைக்கு வெறும் ஆயிரம்தானா?'னு வெறுத்துப் போய், வேற பக்கம் தாவிட்டாங்க.

நெல்லுக்கும் 800 ரூபாயைக் கூட தாண்டாம இறுக்கிப்புடுச்சிக்கிட்டே இருக்கீங்க. நெல்லு விவசாயிகளும் படுத்துக்கிட்டாங்கனா, அப்பத் தெரியும், அரசியலை வெச்சிக்கிட்டு ஆட்டம் போடுற அய்யாக்களோட வண்டவாளம். 'உலகமய ஆசையால இந்த நிலைமைக்கு எங்களை ஆளாக்கிட்டீங்களே?'னு ஆளாளுக்கு கல்லைத் தூக்கி எறியப்போறாங்க பாருங்க.

'உலகமயம்கறது ஏழை, மூன்றாவது நாடுகள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். ஆயுதங்களை வைத்துதான் ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டும் என்பதில்லை. கத்தியின்றி ரத்தமின்றி ஆடை மாற்றம், உணவுமாற்றம் என்று கலாச்சரத்தை சிதைச்சாலே போதும்... ஒரு நாடு நாசமாகப் போய்விடும். உங்களுக்கு எதிரி யாரென்றே தெரியாது. யாரை எதிர்த்துப் போராடுவீர்கள். அமெரிக்காவுடன் அணுசக்தி ஓப்பந்தம் மட்டும் போட்டுவிட்டால், அதோட முடிந்து போகும் உங்க ஆட்டம்!'

-இப்பிடி அதிர்ச்சிக் குண்டை அடியேன் தூக்கிப் போடலீங்க, ரம்சே கிளார்க்னு சொல்லப்படுற அமெரிக்க வக்கீல்தான் சொல்லியிருக்காராம். இவரு சாதாரணப் பட்ட ஆள் இல்லீங்களாம். மோனிகா லெவன்ஸ்கிகிட்ட, தன்னோட கில்லாடி வேலைகளைக் காட்டின அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனையே உலுக்கி எடுத்து, மன்னிப்பு கேட்க வெச்ச மனித உரிமை வக்கீலாம். 'பாம்பறியும் பாம்பின் கால்'ங்கற மாதிரி சொந்த நாட்டோட குணாதியங்களைப் பத்தி இப்படி புட்டுப்புட்டு வெச்சிருக்காரு போல. ஆனா, உங்களுக்கு மட்டும் 'எஜமான விசுவாசம்' விட்டுப் போகலீங்க.

அய்யா, உங்க பதவி போனா, பொருளாதார நிபுணரா உலக வங்கில போய் உக்காந்துக்குவீங்க. நாங்க எங்கீங்க போவோம்?

இப்ப நிலம் ரசாயன உரத்துக்கு அடிமையாகிப் போச்சுங்க. அடுத்தாப்புல அமெரிக்க லாகிரி வஸ்துகளையும் சூதாட்ட கலாசாரத்தையும் வரவழைச்சிக்கிட்டிருக்கீங்க. இப்படியே போனா சீக்கிரமே பாரதம் பட்டுப் போயிடுமுங்க. வேணாமுங்கய்யா... விட்டுட்டுங்க. நாங்க பிழைச்சுப் போறோம்!

இப்படிக்கு
கோவணாண்டி

0 comments: