Wednesday, December 19, 2007

அணு சக்தி ஒப்பந்தம் - இன்றைய நிலை

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முடிவில் காங்கிரஸ் உறுப்பினர்களை சோனியா காந்தி அழைத்தார். ‘அனைவரும் தொகுதிக்குச் செல்லுங்கள்’ என்று அறிவுறுத்தினார். இதன் பொருள் என்ன? இப்போதைய நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்று அர்த்தம்.

பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி.யும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி என்று அறிவித்திருக்கிறது. அவர் பாலைவனத்தில் பூத்த மலர் என்று சிவசேனா வரவேற்றிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ்குமாரும் அதனை வழிமொழிந்திருக்கிறார்.

ஆமாம். இன்றைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டிற்கு மேல் இருக்கிறது. இப்போது தேர்தல் திணிக்கப்படுவதற்கு யார் காரணம்? இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்தான்.

வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகளின் தோள்களில் அவருடைய அரசு அமர்ந்திருக்கிறது. அவருடைய அரசு ஒரு குறைந்தபட்ச செல்ல திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம்தான் அரசின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டி.

வெளியுறவுத் துறையைப் பொறுத்தவரையில் பண்டுதொட்டு நாம் பயணிக்கும் நடுநிலைக் கொள்கை வழித்தடத்தில்தான் நடைபோட வேண்டும் என்று அந்தத் திட்டம் தெளிவாகத் தெரிவிக்கிறது. அந்தப் பாதை நமக்கும் உலகிற்கும் பண்டிட் ஜவஹர்லால் நேரு வகுத்துத் தந்த ஒளிமயமான சாலையாகும்.

ஆனால், மன்மோகன் சிங் அரசு ஆரம்பம் முதலே தடம் புரண்டது. 2005_ம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்றார். அவரும் அதிபர் புஷ்ஷ§ம் மந்திராலோசனை நடத்தினர். மர்ம ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்தம் தான் இப்போது விவாதத்தில் வெந்து கொண்டிருக்கும் அணுசக்தி உடன்பாட்டின் முதல் கட்டமாகும்.

அன்றைக்கே அந்த உடன்பாட்டை நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மன்மோகன் சிங் தெரிவிக்கவில்லை. அந்த உடன்பாட்டின் அடுத்தகட்டப் பிரச்னை மீது அமெரிக்காவிலேயே விவாதங்கள் எழுந்தன. அதன் பின்னர்தான் இந்தியா விழித்துக் கொண்டது.

அந்த உடன்பாட்டை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று இதற்கு முன்னரே இடதுசாரிக் கட்சிகள் கோரின. மன்மோகன் சிங் அவைக்கு வந்தார். பிரதமருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரே ஒரு விளக்கத்தைப் படித்தார். விவாதம் நடைபெறவில்லை.

அதனால் இடதுசாரிக் கட்சிகளுக்கு சந்தேகங்கள் எழுந்தன. ‘மன்மோகன் சிங் அரசிற்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம்’ என்றன. ‘அப்படித் திரும்பப் பெற்றால் கவலையில்லை’ என்று ஆவேசம் கொண்டார் மன்மோகன் சிங்.

ஆனால், அடுத்த சில தினங்களில் ‘இந்தப் பிரச்னைக்காக இடதுசாரிக் கட்சிகளின் உறவை இழக்க விரும்பவில்லை’ என்றார் சோனியா.

இடி விழுந்தது போல் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. ‘எப்படியாவது அணுசக்தி உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று நிதிஅமைச்சர் வந்தார். முன்னாள் அமெரிக்க அமைச்சர் கிசிங்கர் வந்தார். இந்திய வம்சாவளித் தொழிலதிபர்கள் வந்தனர். காரணம், இந்த ஒப்பந்தம் எல்லா வகையிலும் அமெரிக்காவிற்குச் சாதகம் என்பதனை ஏற்கெனவே வெளியுறவு துணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

சுருங்கச் சொன்னால், இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்கும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இறுதி மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பால் வார்த்தது போல் இருக்கும்.

அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பின்னர், சோனியா காந்தியே தனது நிலையை மாற்றிக் கொண்டார். ‘இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இது தேவை’ என்றார்.

சோனியாவும் பங்கு கொண்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உடன்பாட்டின் அபாயத்தை மார்க்சிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் எடுத்துக் கூறினார். அதன் பின்னர் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘உடன்பாட்டை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்’ என்றார்.

‘உடன்பாட்டில் சில மாறுதல்கள் தேவை’ என்று நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டலீசாரைசைக் கோரினார். இனி உடன்பாட்டைப் பரிசீலிக்க இயலாது என்று அந்த அம்மையார் தெரிவித்தார்.

இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பற்றி விவாதம் நடந்தது. நாடாளுமன்றத்தில் ஏழு மணி நேரம் நடந்த விவாதத்தில் மன்மோகன் சிங் அரசு தனிமைப்பட்டது. ‘அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தேவையில்லை’ என்று பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள், ஆவேசக் குரல் எழுப்பினார்கள். இடதுசாரிக் கட்சிகளும் பி.ஜே.பி.யும் இணைந்து நின்றன.

விவாதத்தின்போது ஒரே ஒரு முறைதான் பிரதமர் மன்மோகன் சிங் எழுந்தார். ‘நாம் அணுகுண்டு சோதனை செய்வதை அமெரிக்க ஒப்பந்தம் தடை செய்யவில்லை’ என்றார்.

விவாதத்திற்கு வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் பதில் அளித்தார். ‘இடதுசாரிக் கட்சிகள் எழுப்பிய ஐயப்பாடுகளுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. உடன்பாடு பற்றிய ஒவ்வொரு கட்டப் பேச்சின் முடிவை மன்றத்திற்குத் தெரிவிப்போம்’ என்றார். இதன் பொருள் என்ன? இந்தியாவில் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவோம் என்பதுதானே?

குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் என்ன சொன்னார்? ‘அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை மக்கள் அமோகமாக வரவேற்கிறார்களாம். ஆகவே, அதனைச் செயல்படுத்துவோம்’ என்றார்.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்திருந்தால் அமெரிக்க அணுசக்தி உடன்பாடு குப்பைக் கூடைக்குப் போய் இருக்கும். இந்த நிலையில், எந்த மக்கள் இந்த உடன்பாட்டை வரவேற்கிறார்கள் என்பதனை மன்மோகன் சிங் தெளிவுபடுத்தியிருக்கலாம். இந்த உடன்பாட்டை அமெரிக்க மக்கள்கூட வரவேற்கவில்லை. அமெரிக்கத் தொழிலதிபர்கள் வரவேற்கிறார்கள். காரணம், அணு உலைகளை உற்பத்தி செய்யும் அந்த நாட்டு ஆலைகளுக்கு கடந்த இருபது ஆண்டுகளாக வேலையில்லை.

அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்ட பின்னர், பின்வாங்கும் நிலையில்தான் மன்மோகன் சிங் இருந்தார். ‘இந்த உடன்பாட்டோடு வாழ்க்கை முடிந்துவிடப்போவதில்லை. பொது வாழ்வில்

ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஏட்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவர் நைஜீரியா சென்றார். அங்கிருந்து அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம் பேசினார். திரும்பி வந்தார். கதை திசை திரும்பியது. ‘உடன்பாட்டை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. அதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்களும் எதிர்க்கலாமா?’ என்று அவர் சரத்பவாரிடம் மன்றாடினார். லாலுவிடமும் கெஞ்சினார். அவற்றையெல்லாம் கடந்து வாஜ்பாயை, அத்வானியைச் சந்தித்தார். ‘இந்த உடன்பாட்டிற்கு நீங்கள்தானே பிள்ளையார்சுழி போட்டீர்கள். அந்த உடன்பாட்டைத்தானே செயல்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.

ஒரு நாட்டின் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களை வீடு தேடிச் சென்று சந்தித்து இப்படி ஆதரவு திரட்ட வேண்டுமா? அதற்குக் காரணம் அமெரிக்க நிர்ப்பந்தம் தான்.

நாடு ஏற்றுக்கொண்ட நடுநிலைக் கொள்கையிலிருந்து நழுவுகிறீர்களே என்றால், தத்துவங்களை மாற்றிக் கொள்ள தைரியம் வேண்டும் என்கிறார் மன்மோகன் சிங். சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்கிறார் சிதம்பரம். ஆமாம். கற்பை ஒதுக்கி வைத்துவிட்டு கண்ணகிக்கு சிலை எடுப்போம் என்கிறார்கள்.

புத்தாண்டு பிறந்ததும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம். பி.ஜே.பி. தமது பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டது. அப்படி காங்கிரஸ் கட்சி யாரை அறிவிக்கப் போகிறது? மன்மோகன் சிங்கையா?

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்குமா?

அப்படி ஒரு நிலை வந்தால், தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் ஒரு நிலை எடுக்க வேண்டியிருக்கும். அதனைத் தவிர்ப்பதற்கு தமிழக முதல்வர், என்ன செய்யப் போகிறார்?

0 comments: