Sunday, September 30, 2007

கியூபா வழியில் கேரளம்

இது 10.10.2007 பசுமை விகடனில் வந்த கட்டுரை.


இனி இயற்கை விவசாயம்தான்...

க்யூபா வழியில் கேரளா!

சரியான திட்டமிடலே பாதிவெற்றிக்குச் சமம் என்பார்கள். அந்த வகையில் தெள்ளத்தெளிவான கொள்கைகளுடன் அதிகாரப்பூர்வமாக இயற்கை விவசாயம் என்கிற பாதையில் வேகமாக அடி எடுத்து வைத்திருக்கிறது கேரள மாநிலம்.



கம்யூனிஸ தேசமான க்யூபா, ஒரு பக்கம் அமெரிக்கா வின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், முழுக்க இயற்கை விவசாயம் என்பதையும் கையில் எடுத்துக் கொண்டு உலகையே வியக்க வைத்துக்கொண்டுள்ளது. அதேபாணியில், இங்கே கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்திலும் இனி இயற்கை விவசாயம்தான் எங்கள் கொள்கை என்று வீரமுழக்கமிட்டிருக்கிறார் மாநில முதல்வர் அச்சுதானந்தன்.


மாநிலத்தின் இயற்கை விவசாயக் கொள்கையை வடிவமைக்கும் வகையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது மாநில பயோ டைவர்சிட்டி போர்டு. இதற்காக தமிழகம், கர்நாடகம் உட்பட இந்தியா முழுக்கவிருந்து இயற்கை விவசாய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி யாளர்களும் அங்கே குவிந்தனர்.

காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மாநில முதல்வர் அச்சுதானந்தன் வந்து சேரவில்லை. சரி, நிகழ்ச்சி நடந்த மாதிரிதான் என்று நாம் நினைத்தால்... சட்டென்று கூட்டத்தை துவக்கிவிட்டனர் ஏற்பாட்டாளர்கள்.

எல்லோரையும் வரவேற்றுப் பேசிய, பயோ டைவர்சிட்டி போர்டு தலைவர் விஜயன், இந்தியாவிலேயே முதல் முறையாக பல்லுயிர் சூழலைப் பாதுகாக்க பயோ டைவர்சிட்டி போர்டு என்கிற அமைப்பு கேரளா மாநிலத்தில்தான் தொடங்கப்பட்டது. இயற்கை அளித்தவற்றையெல்லாம் வறட்டு கௌரவத்துக்காக நாம் அழித்துவிடக் கூடாது. பாரம்பரியமான விவசாய முறைகளையும், லாபம் தரும் தொழில்நுட்பங்களையும் விவசாயி களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இயற்கை விவசாயம் என்ற பாதையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் விரைந்துகொண்டுள்ளன. அதேபோல கேரளாவிலும் இயற்கை விவசாயத்தை விரைவுபடுத் துவதற்காக நம்முடைய முதல் அமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் எல்லா வகையிலும் உதவிகளை வழங்கிவருகிறார்கள்’’ என்று பேசிக்கொண்டிருக்கும் போதே முதல்வர் அச்சுதானந்தன் மேடைக்கு வந்து சேர்ந்தார்.

(போலீஸாரின் பூட்ஸ் சத்தம்... அதிகாரிகளின் பரபரப்புக் குரல்கள்... தொண்டர்களின் உற்சாகக் கூச்சல் என்று எதுவும் இல்லாமல் ஏதோ தெருமுனை டீ கடைக்கு பேப்பர் படிக்க வந்தவர் போல் தனி ஆளாக அவர் வந்து சேர்ந்ததது... தமிழகத்திலிருந்து போயிருந்த நமக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவே செய்தது).

உடனடியாக மைக் பிடித்த முதல்வர், ‘‘இந்தியாவில் இயற்கை விவசாயம் என்றால்... கேரளா என்று சொல்லும் நிலை ஏற்படவேண்டும். நம் மாநிலத்தில் உள்ள மண்ணையும், மக்களையும் காப்பாற்ற இயற்கை விவசாயம்தான் ஒரேவழி. பல நுறு ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த பாரம்பரியங்கள் அழியத் தொடங்கியுள்ளன. பொக்காலி நெல்லும், செம்மீனும் இன்று போன இடம் தெரியவில்லை. மண், காற்று, நீர் என எல்லா இடங்களிலும் விஷம் கலந்துவிட்டது. இதை நினைத்தால் வேதனையில் நெஞ்சு விம்முகிறது. விஷமில்லாத மாநிலமாக கேரளத்தை உருவாக்க எல்லாவகையிலும் என்னுடைய பங்கு நிச்சயம் இருக்கும்.


இனி விவசாயம் ஜெயிக்குமா? என்று இந்தியா முழுக்கவே விவசாயிகளிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் தைரியம் கொடுத்து, நம்பிக்கையை உண்டாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் தொழில் நுட்பத்தையும் கேரளா வுக்குள் அனுமதிக்க மாட்டோம். பி.டி. எனப்படும் மரபணு மாற்று விதைகள் சூழலுக்கு வேட்டு வைக்கக்கூடியவை. மறந்தும் கூட அதை எங்கள் எல்லையில் நுழைய விடமாட்டோம் என்று முழங்கிய முதல்வர் அச்சுதானந்தன்,

அறிஞர் பெருமக்கள் எல்லாம் இரண்டு நாட்களாக இங்கே ஆலோசனை நடத்தி, வகுத்து தரவிருக்கும் இயற்கை விவசாயக் கொள்கைகளை அமல்படுத்த நான் தயராக இருக்கிறேன்’ என்று உறுதிகூறி அமர்ந்தார்.

அடுத்து, டெல்லியில் இயங்கிவரும், உயிரி தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு என்ற அமைப்பை சேர்ந்த டாக்டர் தேவேந்தர் சர்மா... ‘‘நாடு முழுக்க கடன் தொல்லை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதைத் தடுக்க அரசுத் தரப்பில் எந்தவிதக் கூட்டமும் நடைபெறவில்லை. ஆனால், மரபணு மாற்றபட்ட விதைகளை எப்படி விவசாயிகளின் தலையில் கட்டுவது என்று விஞ்ஞானிகளும், அரசு அதிகாரி களும் கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டே இருக் கிறார்கள்’’ என்று அரங்கை அதிரவைத்தார்.

இரண்டாம் நாள் காலையில் தமிழகத்தில் நடக்கும இயற்கை விவசாயம் குறித்து படங்களுடன் பேசத் தொடங்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.

‘‘தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நிலத்தையே ஆராய்ச்சிக் கூடமாக்கி, புதுப்புதுக் கண்டுபிடிப்பு களை செய்து வருகிறார்கள். இயற்கை விவசாயம் மாநிலம் முழுக்க விவசாயிகளால் ஓர் இயக்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஒற்றை நாற்று நடவு என்பதை எங்கள் மாநிலத்தில் ஒரு புரட்சியாகவே செய்து வருகிறார்கள். ஒரு தூரில் 100 கிளைகள் வெடிக்கின்றன. இதிலிருந்து 250 கிராம் நெல் மணிகள் விளைந்திருக்கின்றன. இந்த அதிசயத்தை நாகப்பட்டிணத்தில் உள்ள விவசாயி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

ரசாயன இடுபொருட்கள் இல்லாமல் இயற்கை முறையிலேயே விளைச்சலைக் கூட்டு வதற்கு ஏராளமான தொழில்நுட்பங்கள் கைவசம் உள்ளன. அமுதபானி (அமிர்த கரைசல்) பஞ்சகவ்யா, இ.எம். பூச்சிவிரட்டி என்று நிறைய இருக்கின்றன. எல்லா வற்றையும் விவசாயிகளே தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள்’’ என்று சுருக் கமாகப் பேசியவர், இயற்கை விவசாயத்தில் வெற்றிப்பெற்ற தமிழக விவசாயிகளின் புகைப்படம் மற்றும் வீடியோ படங்களைக் காட்டிவிட்டு அமர்ந்தார் நம்மாழ்வார்

பெங்களூரு, காந்தி வேளான் அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர்.பிரகாஷ் பேசும்போது, ‘இந்தியாவில் முதல் முறையாக இயற்கை விவசாயக் கொள்கையை 1995ம் ஆண்டே கர்நாடகா அரசு செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. எங்கள் அரசு, இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு செல்வதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங் களோடு சேர்ந்து வேலை செய்கிறது. ஒவ்வொரு தாலூகாவிலும் ஒரு விவசாயப் பண்ணையை உருவாக்கி வருகிறது அரசு. அங்கே இயற்கை முறையில் விளைவிக் கப்பட்ட பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வதற்காக பெங்களூருவி லிருக்கும் லால்பாக் பூங்காவில் ஒரு கடை தனியாக செயல்பட்டு வருகிறது. முழுக்க இயற்கை விவசாயம் சார்ந்த மாநிலமாக கர்நாடகாவை மாற்றுவதற்கு எல்லா வகையிலும் மாநில அரசு நடவடிககை எடுத்து வருகிறது என்று சொல்லி கூட்டத்தினர் அனைவரையும் வியக்க வைத்தார்.

இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில், ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மாடு, ஒரு எருமை ஆகியவற்றை வழங்கவேண்டும் என்பது தொடங்கி, ரசாயன உரம் மற்றும் மருந்துகள் விற்பனை செய்வதையும், தெளிப்பதையும் மாநிலத்தில் முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்பது உட்பட 24 வகையான கொள்கைகள் உருவாக்கப் பட்டன.

எல்லாவற்றையும் செயல்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று முதல் நாள் காலையிலேயே முதல்வர் அச்சுதானந்தன் பச்சைக்கொடி காட்டிவிட்டுச் சென்றதால், அடுத்த வரும் ஆண்டுகளில் கேரள மாநிலம் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கப் போகிறது என்ற நம்பிக்கையோடு அனைவரும் கலைந்தனர்.

கடைசியாக நம்மிடம் பேசிய நம்மாழ்வார், இங்கே அரசே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே நம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலாவது அரசு விழித்துக் கொண்டால், இந்தியாவிலேயே இயற்கை விவசாயத்தில் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் தட்டிச்சென்றுவிடும் என்று ஆதங்கத்துடன் சொன்னவர்,

அரசு இறங்கி வராவிட்டாலும் விவசாயி களே இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதைச் சாதித்துவிடுவார்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

Tuesday, September 25, 2007

மருத்துவக் கொலைகள்

கடந்த வாரம் மருந்து வாங்க சென்றிருந்தேன். மருந்தின் விலையை கேட்டு தலை சுற்றிப்போனேன். காரணம் 1 மாதத்தில் மருந்தின் விலை 25% ஏறி இருந்தது. காரணம் என்ன என்று விசாரித்தால் மருந்து கடைக்காரர் சராசரியாக எல்லா மருந்துகளும் இந்த அளவுக்கு விலை ஏறியுள்ளது. இன்னமும் ஏறலாம் என்றார். காரணம் உற்பத்தியாளர்களே விலையை ஏற்றியதுதான். அவர்களுக்கு ஏன் இந்த விலையை ஏற்றத்தோன்றியது? அதுவும் பல ஆண்டுகளாக விற்று வரும் ஒரு மருந்தின் விலையை?

>உற்பத்தி செலவு ஏறியதா?
>போக்குவரத்து செலவு ஏறியதா?
>வரிகள் உயர்ந்தனவா?
>மொத்த விலைவாசி ஏறியதா?
>தேவைப்பாடு அதிகரித்ததா?

உற்பத்தி செலவு ஊதிய உயர்வுகாரணமாகவும், மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் ஏறும். ஆனால் மொத்த விலைவாசி உயர்வே 6 மாதமாக 6%தான் உயர்ந்தது என்பது மத்திய அரசு பஞ்சப்படியை 6% உயர்த்தியதிலிருந்தே தெரிகிறது. ஒரு மாதத்தில் அப்படி விலையேறி இருந்தாலும் ஒட்டுமொத்தமாக உற்பத்தி + போக்குவரத்து செலவுகள் 10% கீழாகவே இருக்கவேண்டும். வரிகள் உயர்ந்துவிடவில்லை. தேவைப்பாடு நிலையாக அதே அளவுதான் உள்ளது.

பின்னர் ஏன் விலையேற்றம்? இது உற்பத்தியாளர்களே தன்னிச்சையாக லாப நோக்கில் ஏற்றிய விலைதான் என்பது நிதர்சனமாக தெரிகின்றது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்கள் ஆராய்ச்சிக்காக அதிக அளவு செலவு செய்தனராம். சரி ஆராய்சிக்காக அதிக அளவு செலவு செய்திருந்தால் புதிய மருந்துகள் அல்லது உற்பத்தியை துவங்கி 5 ஆண்டுகளுக்குள்ளாக உள்ள மருந்துகள்தான் விலையேறி இருக்க வேண்டும். ஆனால் 10-15 ஆண்டுகளாக விற்பனை செய்து கொண்டிருக்கும் மருந்துகள் ஏன் ஏற வேண்டும்? இன்னுமா அவர்கள் Break Even Point ஐயே எட்டவில்லை? ஆனால் இவர்களின் பங்குகள் பங்கு சந்தையில் குவிக்கும் லாபம் மிக அதிகம்.

சமீபத்தில் மருந்துகளின் மீதான கட்டுப்பாட்டினை மத்திய அரசு மருந்து சட்டத்திருத்தம் மற்றும் காப்புரிமை சட்ட திருத்தம் மூலமாக விலக்கிக் கொண்டது. இதன் விளைவாக ரேபிஸ் மருந்துக்கான விலை அடுத்த மாதமே இரண்டு மடங்காகிவிட்டது. அதாவது 400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைப்பதில்லை. ஏழைகள் இது போன்ற மருந்துகளை காசு கொடுத்து வாங்கும் நிலையி இல்லை. நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோர் மாத ஊதியமாக 600 ரூபாய் கூட பெறுவதில்லை என்பது அரசின் அறிக்கை. அப்படிப்பட்டவர்கள் வெறி நாய்க்கடிக்கு ஆளானால் அவர்களின் நிலை? மருந்து வாங்க பணமில்லாததால் மரணிக்க வேண்டியதுதான்.

கொலை என்றால் என்ன? உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுவது அல்லது பறிக்கப்படுவது.

இங்கு நோயாளி இருக்கிறார்,
மருந்து இருக்கிறது,
வைத்தியம் பார்க்கும் மருத்துவர் இருக்கிறார்,
மருத்துவமனைகள் இருக்கிறது.

ஆனால் நோயாளியிடம் மருந்து வாங்க பணமில்லை. அதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இங்கு அந்த நோயாளியின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது. இதை கொலை என்று சொல்லாமல் என்ன சொல்ல? இன்னுமொரு கொடுமை என்னவென்றால் இவ்வாறு இறப்பவர்களின் இறப்பு சான்றிதழில் நாய்க்கடியால் இறந்துபோனார் என்று சொல்லப்படுவதால் இந்தவகை மருத்துவ கொலைகள் வெளியில் தெரிவதில்லை. மாறாக மருந்து வாங்க பணமில்லாததால் மரணமடைந்தார் என்று சான்றளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டால் இதுபோன்று நாடு முழுவது நடக்கும் மருத்துவ கொலைகளின் பட்டியல் வெளிவரும். அதில் அதிர்ச்சிகள் நிறைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

என்ன கொடுமை சார் இது?

Thursday, September 20, 2007

விலகிச் செல்லும் ஆரோக்கியம்!

நன்றி : ரவிக்குமார் எம்.எல்.ஏ.
பத்திரிக்கை : ஜூனியர் விகடன்,23.09.2007 இதழ்.

விலகிச் செல்லும் ஆரோக்கியம்!


ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு ‘உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஒரு வீடு’ என்றுதான் பதில் சொல்வோம். இந்தப் பட்டியலில் ‘நல்ல மருத்துவ வசதி’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. நமது அரசியல் சட்டத்தில் அப்படி வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றாலும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் அதுவலியுறுத்தப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள், ‘கட்டாய கிராமப்புற சேவை’ என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். ‘கிராமங்களுக்கு சென்று பணியாற்றுவதில் தங்களுக்கு எவ்வித மறுப்பும் இல்லை’ என்று அவர்கள் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்ததைப் பார்த்தபோது, ‘அடடா? நமது டாக்டர்கள் எவ்வளவு நல்லவர்கள்!’ என்று எண்ணத் தோன்றியது. மத்திய அரசும்கூட கிராமப்புற மக்களின் ஆரோக்கியத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறதே என்று மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்களோ வேறுவிதமாக இருக்கின்றன. அரசின் இந்த அக்கறை உண்மைதானா?

1991 க்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற சுகாதார வசதிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து இந்த வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இந்தியா முழுவதுமிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை


18,671 ஆகும். அது எட்டாவது ஐந்தாண்டுத்திட்ட கால இறுதியில் 22,149 ஆக உயர்ந்தது. ஆனால், 1997-2002 க்கு இடைப்பட்ட ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, இந்தியா முழுவதும் 693 ஆரம்ப சுகாதார நிலையங்களே புதிதாக உருவாக்கப்பட்டன. அடுத்ததாக வந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திலோ நிலைமை இன்னும் மோசமாகி வெறும் 394 ஆரம்ப சுகாதார நிலையங்களே கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோலவே ‘கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்கள்’ மற்றும் ‘சப் சென்டர்’களின் எண்ணிக்கையிலும் பெருமளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக அமைக்கப்படுகின்ற கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்களை ஒரு லட்சம் பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைத்தால்கூட, இப்போது இருப்பதுபோல இரண்டு மடங்கு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இருக்கின்ற மருத்துவ மையங்களிலும் போதுமான மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது தனிக்கதை. அவற்றில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களைப் பற்றிக்கேட்கவே வேண்டாம்.

முப்பதாயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்று வைத்துக் கொண்டால்கூட, இப்போதுள்ளவை போதாது. சுகாதாரத் துறையை மைய அரசு இப்படிப் புறக்கணித்து வருவதால், அரசு மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் தனிநபர் வருமானத் தின் பெரும்பகுதி, தனியார் மருத்துவமனைகளிடம் கொட்டப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிற சொத்தை விற்றோ, கடன் வாங்கியோதான் தனது மருத்துவத் தேவையை ஒருவர் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற சூழல். ஆந்திர மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு அவர்களின் மருத்துவ செலவுக்காகப் பெற்ற கடன்களும் ஒரு காரணம்.

‘நமது உடல்நலத்தை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?’ என்ற எண்ணத்தில் யாரும் இதுபற்றி அதிகம் பேசுவதில்லை. சுகாதார வசதிகளைச் செய்து கொடுத்துதான் தீரவேண்டும் என்று அரசாங்கத்திடம் நாம் வாதாட முடியுமா? அதற்கு நமக்கு அதிகாரம் உள்ளதா? இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும். நிச்சயமாக நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்த முடியும். சர்வதேச அளவில் பொது சுகாதாரம் குறித்து உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21ஐ அத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு குடிமகனது உயிர்வாழும் உரிமையும், தனிமனித சுந்திரமும் காக்கப்பட வேண்டும் என்று அந்தப் பிரிவு வலியுறுத்துகிறது.

‘‘உயிர்வாழ்வதற்கான உரிமை என்பதில் மருத்துவ வசதியைப் பெறுவதற்கான உரிமையும் உள்ளடங்கி இருக்கிறது, எனவே, அதை உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை’’ என மொஹிந்தர் சிங் சாவ்லா என்பவர் பஞ்சாப் அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருந்தும். இதுமட்டுமின்றி, ஒரு நோயாளிக்கு சரியான நேரத்தில் சரியான மருத்துவ சிகிச்சையை ஒரு அரசு மருத்துவமனை வழங்காவிட்டால், அது அந்த நோயாளியின் உயிர்வாழும் உரிமையை மீறியதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.

இந்தியாவில் நிலவும் மோசமான சுகாதார நிலையைக் கணக்கில் கொண்டுதான் 2002ம் ஆண்டு ‘தேசிய சுகாதாரக் கொள்கை’ ஒன்று மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பொது சுகாதாரத் தேவைக்கென செலவிடப்படும் தொகை மிகவும் குறைவாக இருப்பதை அப்போது ஒப்புக்கொண்ட அரசு, 2010ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த செலவில் (ஜி.டி.பி.) இரண்டு சதவிகிதத்தை சுகாதாரத்துக்கென ஒதுக்கப்போவதாக உறுதியளித்தது. ஆனால், குறைந்தது ஐந்து சதவிகித நிதியை இதற்காக ஒதுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பல காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போது ஒதுக்கப்படும் நிதி, ஒரு சதவிகிதம்கூட இல்லையென்பது வேதனைக்குரியதாகும்.

யுத்தத்தால் சீரழிந்து போயிருக்கும் இலங்கை அரசாங்கம்கூட, பொது சுகாதாரத்துக்காக இந்தியா வைப் போல இரண்டு மடங்கு செலவிடும்போது, இந்திய அரசு இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது!

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் குறைந்த அளவு நிதி ஒதுக்கீட்டால் சுகாதாரத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க நமது மருத்துவர்களின் அலட்சியமும், பொருள் ஈட்டுவதில் அவர்கள் காட்டும் ஆர்வமும் ஏற்படுத்தும் கேடுகள் எண்ணிலடங்கா. ‘‘கிராமப்புறங்களில் இருந்துதான் நாங்கள் வந்திருக்கிறோம். கிராமங்களுக்குப் போவதில் எங்களுக்குத் தயக்கமில்லை’’ என மருத்துவ மாணவர்கள் சொன்னபோதிலும், யதார்த்த நிலை அப்படியில்லை.

‘‘தமிழ்நாட்டில் உள்ள 37,733 அலோபதி மருத்துவர் களில், சுமார் எழுபது சதவிகிதத்தினர் தனியார் துறையில் பணிபுரிகின்றனர். தனியார் மருத்துவமனைகள் பெரும் பாலும் நகரப்பகுதிகளில்தான் உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் சுமார் பத்தாயிரம் அலோபதி டாக்டர்கள் உள்ளனர். சென்னைப் பகுதி யில் எண்ணூறு பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். ஆனால், தமிழகம் முழுவதும் 1,590 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையே காணப்படுகிறது’’ என்று 2005ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மருத்துவ வசதிகளில் தற்போது நகர மற்றும் கிராமப் பகுதிகளுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுக்கு இது ஓர் உதாரணம்.

நாட்டின் பொது சுகாதார அமைப்பு மோசமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள், தனியார் மருத்துவ மனைகளை நாடிச்செல்வதைப் பார்க்கிறோம். அப்படிப் போவதால் தனியார் மருத்துவ சேவை சிறப்பாக இருக் கிறது என்று அர்தமாகிவிடாது. அரசு மருத்துவர்கள் தனியே பிராக்டிஸ் செய்வது தடை செய்யப்படாத காரணத்தால், தனியார் மருத்துவமனைகளோடு ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சில அரசு மருத்துவ நிபுணர்கள், தம்மிடம் வரும் நோயாளிகளை அந்தத் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும்படி நிர்ப்பந்திக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத அத்தகைய தனியார் மருத்துவமனைகள் பணம் பறிக்கும் மையங்களாகவே செயல்படுகின்றன. சட்டவிரோத கருச்சிதைவுகள் தொடங்கி, உடல் உறுப்புகளைத் திருடுவது வரை சட்டத்துக்குப் புறம்பான எல்லா காரியங்களுக்கும் அவை இடமளிக்கின்றன.

மிகப்பெரும் வணிக மையங்களாக உருவெடுத்து வரும் தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகளுக்கு அரசாங்கமும் பலவிதங்களில் உடந்தையாக இருக்கிறது. இதற்கு ஒரேயரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். பல தனியார் மருத்துவமனைகள் சலுகை விலையில் நிலங்களைப் பெற்றுள்ளன. பல்வேறு மருத்துவ உபகரணங்களை வரிச் சலுகை பெற்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளன. தாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளில் முப்பது சதவிகிதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக வாக்குறுதி அளித்தே இந்தச் சலுகைகளை அந்த மருத்துவமனைகள் பெற்றுள்ளன. அதேபோல் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை ஒதுக்குவதிலும், பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் இப்படி ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக செய்யப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு தனியார் மருத்துவமனையும் இந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை.

இது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டில் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதில ளித்துப் பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர், ‘‘சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால் இதற்கான வரைமுறைகளை மாநில அரசுகள்தாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.

சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்தாலும், மருந்து விலைகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. ‘காட்’ ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்திய சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களின் விளை வாக மருந்து விலைகள் பலமடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு மத்திய அரசே காரணம். தனியார் பொறியியல் கல்லூரிகளில் ரெய்டு நடத்தியது போல, தனியார் மருத்துவமனைகளிலும் அதிரடி சோதனை செய்து, இலவச மருத்துவ வசதி தொடர்பான வாக்குறுதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்டறிந்தால் என்ன? அவற்றில் மேற்கொள்ளப்படும் வருமான வரி சோதனைகளைவிட முக்கியமானதல்லவா இது? அத்துடன் இப்படி சலுகைகள் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியலையும், அவை பெற்றுள்ள சலுகைகளையும் தமிழக அரசு தனது இணையதளத்தில் வெளிப்படையாக அறிவித்தால் பொதுமக்களிடமும் இதுபற்றி ஒரு விழிப்பு உணர்வு ஏற்படும்.

ஒரு நாட்டின் ஆரோக்கியம் அதன் பொருளாதார வலிமையில் மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்திலும் அடங்கியுள்ளது. தமது குடிமக்களை நோய்களுக்கு பலியாக்கிக்கொண்டு, தான் வலிமையோடு இருப்பதாக ஒரு அரசு மார்தட்டிக்கொள்ள முடியாது. இதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக ‘மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ்’ செய்வதற்கு திட்டம் ஒன்றை மாநில அரசு உருவாக்கிட வேண்டும். தேசிய அறிவுசார் ஆணையம் உருவாக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் இப்போது செயல்வடிவம் பெறவுள்ளன. அதுபோல மத்திய அரசு ‘தேசிய சுகாதார ஆணையம்’ ஒன்றை உருவாக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை போன்ற சிறப்பு மருத்துவமனைகளை முதல்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகளிலாவது துவக்கு வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

வளர்ச்சி + வறுமை = புரட்சி

நன்றி : ஜென்ராம், ஜூனியர் விகடன், 19.09.2007

அமைதியான சமூக மாற்றத்தை சாத்தியமில்லாமல் செய்பவர்கள், ஒரு வன்முறைப் புரட்சியைத் தவிர்க்க முடியாதபடி உருவாக்கி விடுகிறார்கள்' என்ற வாசகத்தை அவர் அறிந்திருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், அப்படி ஒரு அர்த்தம் தொனிக்கும் வகையில்தான் அவர் பேசி இருக்கிறார்.

''நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதல்ல. இந்த இடைவெளி எப்போதெல்லாம் அதிகரித்ததோ, அப்போதெல்லாம் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது'' என்று வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் சி.ஆர்.ரவிச்சந்திரன் பேசி இருக்கிறார். கடந்த 8ம் தேதி சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் 'வருமான வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகளை எப்படி அணுகுவது' என்ற தலைப் பில் பேசும்போது அவர் இதைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

வழக்கமாக அரசியல் தலைவர்கள்தான் இதுபோலப் பேசுவார்கள். அதுவும் ஏழ்மையில் இருக்கக்கூடிய மனிதர்களுடைய வாக்குகளைக் குறி வைத்துப் பேசுவார்கள். ஆனால் இங்கு ஓர் அதிகாரி பேசி இருக்கிறார். இது வரவேற் கத்தக்க ஒரு மாற்றம்தான்! அதே சமயத்தில், பொருளாதார ஏற்றத் தாழ்வு மட்டுமே சமூகப் புரட்சிக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. பொருளாதார மற்றும் உற்பத்தி உறவுகளில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கும் புரட்சியைத்தான் அவர் இங்கே குறிப்பிட்டாரா என்பதும் விவாதத்துக்கு உரிய கேள்வியாகிறது. ஏனெனில், நாம் வாழும் சமூகத்தில் எது புரட்சி, எது கலகம், எது அராஜகம் என்ற வேறுபாடு பெரும் பான்மையான மக்களுக்குப் புரிந்திருக்கவில்லை.

''கலகங்கள் வெற்றி பெற்றால்

புரட்சி என்பார்கள்;

புரட்சி தோற்றுப் போனால்

கலகம் என்பார்கள்!''

என்ற கவிதை வரிகள் இங்கே நினைவில் கொள்ளத்தக்கவை!

எனவே, வருமான வரித்துறை ஆணையர் சொன்ன 'புரட்சி' என்ற சொல்லை விட்டுவிடுவோம். ஆனால், அவர் என்ன சொல்ல விரும்பியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலான இந்திய மக்களிடம் 'அமைதியின்மை' இருக்கிறது என்பதே அவருடைய பேச்சின் உட்பொருள்.


அது உண்மைதான்! திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆள் கடத்தல், பணம் பறித்தல் போன்றவற்றையும் 'அமைதியின்மை'யின் வெளிப்பாடுகள் என்று சொல்லலாம்.

இந்த அமைதியின்மைக்கு என்ன காரணம்? ஒருபுறம் உலகக் கோடீஸ்வரர் கள் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறம் கோடிக்கணக்கான மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு நூறு ரூபாய்கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்தப் பிளவு, சமூகத்தின் அமைதிக்கு இடையூறாக இருக்கிறது. இந்த இருதரப்பில் அரசு கோடீஸ்வரர் களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. இதன் காரணமாகவே நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தப் போராட்டங்களை நோக்கி மக்களை உந்தித் தள்ளும் முக்கியமான நிகழ்வு என்ன? பத்து சதவிகித பொருளாதார வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் நிலத்தை, வசித்த வீட்டை, பார்த்துக் கொண்டிருந்த வேலையை லட்சக்கணக்கான மக்கள் இழக்க நேர்கிறது என்பதுதான்!

பத்து சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக நம்முடைய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன? லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்யும் பெரிய அணைகள், ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் நிலத்தை கையகப்படுத்தும் தொழிலகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் சுரங்கம், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா வளாகங்கள் போன்றவை நம்முடைய வளர்ச்சிக்கு அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றன. சுதேசி தொழில்கள் நசிந்துப்போய் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படுவதற்குக் காரணமாக இருக்கும் பன்னாட்டு மூலதனம் தங்கு தடையின்றி இந்தியாவுக்குள் வருவதற்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறு பாதிக்கப் படும் மக்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக, நிலம், வேலை, குடியிருப்பு ஆகியவற்றை இழக்கும் மக்கள் நடத்தும் போராட்டங்கள் குறித்த செய்திகளை நாம் அடிக்கடிபார்க்க முடிகிறது.2006 ஜனவரி யில் ஒரிசா மாநிலத்தில் கலிங்காநகர் என்னும் இடத்தில் டாடா எஃகு ஆலைக்காக நிலம் கையகப்படுத்தப் படுவதை எதிர்த்து பழங்குடியினர் சாலை மறியலில் இறங்கினர். நவி மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 30,000 விவசாயிகள் திரண்டனர். மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. மகாராஷ்டிரா, ஹரியானா, ஒரிசா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 'வளர்ச்சித் திட்டப்' பணிகளை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். ஆந்திராவில் நிலம் கோரி இடதுசாரிகள் தலைமையில் போராட்டம்நடக்கிறது.

மேலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் மக்கள் போராட்டங்களைத் தவிரவும் பல வகைகளில் மக்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பு எல்லாம் முறைப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பாக வெளிப்படவில்லை. இருந்த போதிலும் மக்களுடைய எதிர்ப்பைக் கண்டு அரசு தயங்குகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கப்படும் நிலத்தின் அளவைக் குறைத்தல், பாதிக்கப்படுவோரின் மறுவாழ்வு என்று சில நடவடிக்கைகளை எடுக் கிறது. இவை போதுமானவையாக இல்லை என்பதால் போராட்டங்களும் தொடர்கின்றன. இந்தப் போராட்டங்களை எல்லாம் அந்தந்த மாநில அரசாங்கங்களும் கடுமையாக ஒடுக்குகின்றன.

போராட்டங்களை ஒடுக்குதல் என்பதற்குக் காவல் துறை நடவடிக்கை என்று மட்டும் பொருளல்ல. கோடிக்கணக்கான பணச் செலவில் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள், அந்த விளம்பரம் பெற்ற நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் போராட்டச் செய்திகளை ஊடகங்கள் மறைத்தல் மற்றும் திரித்தல், அரசு திடீரென்று கண்டுபிடித்து பயன்படுத்தும் சொற்கள் எல்லாமே ஒடுக்குதலின் பகுதிகள்தான். திடீரென்று ஏவப்படும் 'சொல்' அடக்குமுறை என்றால் என்ன என்று நீங்கள் கேட்கக்கூடும். ஓர் அணை கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் பாதிக்கப் படும் குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் 'திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று அரசு அங்கீகரிப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்களை, 'ஆக்கிரமிப்பாளர்களாக' அரசு அறிவித்து விடுகிறது. அவர்கள் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதை அரசு அப்போதுதான் 'கண்டறிகிறது'!

வளர்ச்சி மற்றும் பொதுநன்மை கருதி அந்தப் பகுதியில் பாதிக்கப் படுவோர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று 'வளர்ச்சி'யின் ஆதரவாளர்கள் உபதேசம் செய்கிறார்கள். இந்தக் கருத்தை அரசும் ஏற்றுக் கொள்வதாகவே தெரிகிறது. இந்த கருத்தை அனைவரையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மிகவும் எளிய கணக்கு மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 100 கோடி மக்களின் நல்வாழ்வுக்காக 1 லட்சம் பேர் கஷ்டப்பட நேர்ந்தால் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய அறிவுரை! பாதிக்கப்படுவோரின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொத்தே அவர்கள் குடியிருக்கும் வீடு அல்லது நிலம் அல்லது வேலையாகத்தான் இருக்கும். அதை இழந்தாலும் அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம்!

இவர்களுடைய இந்த வாதத்தை சற்றே திருப்பிப் போடுங்கள். அம்பானி, டாடா உள்ளிட்ட இந்தியாவின் முதல் ஓராயிரம் பணக் காரர்களின் சொத்துக்களை 100 கோடிப் பேரின் நலனுக்காக கையகப் படுத்தலாமா என்று கேளுங்கள். இந்தக் கேள்வி காதில் விழுந்த அடுத்த நொடி, 'வளர்ச்சி'க்கு ஆதரவாக பேசுபவர்கள் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள்!

Wednesday, September 12, 2007

சீனாவிற்கு எதிரான சக்தியாக இந்தியாவை அமெரிக்கா பார்க்கிறது

கீழே இருசாய்வு கோடுகளுக்கு இடையில் அடைக்கப்பட்டிருக்கும் செய்தி சோ அவர்களின் பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள்

//அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு-வார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து! அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!''//

மேற்கண்ட சோவின் பார்வையில் எனக்கு சில சந்தேகங்கள். கற்றறிந்த பெரியோர் சரியான சமதானம் கூறவும்.1. ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு போட்டியாக இந்தியாவை அமெரிக்கா பார்க்கின்றது: இதில் சீனாவுக்கு போட்டி நாடு என்றால் எந்த வகையில்? தொழில் ரீதியாகவா? ராணுவ ரீதியாகவா? தொழில் ரீதியாக என்றால் ஆரோக்கியமான போட்டி. நம் நாட்டிற்கு ஏகப்பட்ட லாபங்கள். ராணுவ ரீதியாகவெனில் நம் நாட்டிற்கு ஏகப்பட்ட கஷ்டங்கள். அமெரிக்காவின் அடியாளாக, சீனத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு நம் இந்திய சிப்பாய்களை பலியாக்க அமெரிக்கா விரும்ப அதற்கு பிரதமர் அவகளும் ஒத்துப்போவது ஒட்டுமொத்த ராணுவத்தையும் வலிந்து போருக்கு பயன்படுத்தவே என்பதல்லவா அதன் உள்ளர்த்தம். "சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக" இந்த வார்த்தைகள் இந்தியா சீனாவிடையே சமாதான பேச்சுக்கள் மூலம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஒரு தீர்வாக அமையாமல் எல்லாவற்றிற்கும் ராணுவம் மூலம் தீர்வு கண்டுகொள்ளலாம். நீ என்னுடன் இரு நான் உன் ராணுவத்திற்கு எல்லா ஆயுத உதவியும் செய்கிறேன். சீனாவுடன் சண்டையிட்டுக்கொண்டே இரு. எல்லா இழந்த பகுதிகளையும் மீட்டுக்கொள்ளலாம் என்று சண்டையை மூட்டிவிடுவதாக அல்லவா இருக்கின்றது. ஏற்கெனவே இதே வாக்குறுதிகளை கொடுத்து பாகிஸ்தானை காஷ்மீர் விவகாரம் மூலம் தூண்டி இன்று மதவாத தீவிரவாதத்தை இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேசம் முழுமைக்கும் தினித்தது. அதற்க் இன்றுவரை மும்பை முதல் ஹைதராபாத் வரை பலியாகிக்கொண்டுதானே இருக்கின்றது. இதே போன்ற மதவாதத்தை ஹிந்து பௌத்தம் என்கிற பிளவுக்கிடையில் தினிக்க அமெரிக்கா முயல்கிறதா? இது எதிர்காலத்தில் நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை, இந்தியா சீனா இடையே ராணுவ மோதல்கள் போட்டி ராணுவ மனப்பான்மையால் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதத்தை பிரதமர் அவர்கள் தருவாரா? அமெரிக்கா சீனாவுக்கு எதிரான சக்தியாக இந்தியாவை பார்கிறது என்பதற்காகவே நம் இந்திய அரசும் எதிரான சக்தியாகவே பார்க்க வேண்டுமா? நமக்கென்று சுய அயலுறவுக்கொள்கையே இல்லையா? நட்புநாடாக்கி நம் வியாபாரங்களை, கலாசார உறவுகளை சீனாவுடன் மேம்படுத்த இந்தியாவால் முடியாதா? ராணுவ நடவைக்கையாலன்றி தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இழந்த பகுதிகளை மீட்க முடியாதா? விடுதலைப்புலிகளுக்கு பேச்சு நடத்தி உங்கள் பகையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறும் அமெரிக்கா இந்தியாவுக்கு, சீனாவுக்கு அந்த அறிவுரையை கூறாமல் எதிரான சக்தி நாடாக கருதும் மர்மம் என்ன? பாகிஸ்தானுடன் நல்லுறவு சாத்தியமாகும்போது சீனாவுடன் முடியாதா? அந்த கோணத்தில் இந்திய தலைமை ஏன் சிந்திக்க மறுக்கிறது. இந்தியாவை இன்னொரு இஸ்ரேலாக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது. 150 கோடி மக்களுக்கும் 107 கோடி மக்களுக்கும் இடையில் பகைமை தீயை அமெரிக்கா முயல்கிறது. நாம் ஏன் அதற்கு இறையாக வேண்டும்? அமெரிக்க ஆயுத ஆத்ரவு பாகிஸ்தானால் இந்தியாவில் நாம் காஷ்மீரில் இழந்த பகுதிகளால் ஏற்பட்ட இறையாண்மை பாதிப்பு, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஆதரவு தீவிரவாதிகள் பாராளுமன்றத்தை தாக்கியபோதும் தொடர்ந்து நட்புக்கரம் நீட்டி பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பேருந்துகளை இயக்கிக்கொண்டிருக்கும்போது ஏற்படாத இறையாண்மை பாதிப்பு சீனாவுடன் வியாபாரம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தி தொடர்ந்த பேச்சு வார்த்தைகள் மூலம் இழந்த் பகுதிகளை மீட்க முயற்சியெடுக்கும்போது மட்டும் ஏற்படும் என்பது எந்த வகை சிந்தனையில் சேர்த்தி? இவையெல்லாம் தேசபக்தியற்ற அமைதியை அறவே விரும்பாத இந்த சின்னதன புத்தியுள்ள மனிதனின் சிந்தனையில் தோன்றிய கேள்விகள். கற்றறிந்த பெரியோர் யாரேனும் இந்த சந்தேகங்களை போக்கி அமைதியான உலகத்தை படைக்க உதவி செய்யுங்களேன்.

Wednesday, September 5, 2007

சில்லரை வியாபாரத்தில் பெரும் நிறுவனங்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் காய்கறி வியாபரத்தை உடனே மூடவேண்டுமென்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உணவுப்பொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகுறிப்பு இங்கே கிடைக்கும் http://satrumun.blogspot.com/2007/07/blog-post_8116.html.

முதலில் மலிவு விலை காய்கறி வியாபாரம் என்கிற முகமூடியோடு களத்தில் இறங்கிய ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் இப்பொழுது சிறிது சிறிதாக ஏகபோக கொள்முதலில் ஈடுபட்டு காய்கறிகளை ஒட்டுமொத்தமாக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்கிறது. பின்னர் இது அந்த பகுதி குளி பதன களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 4 வகைகளாக பிரித்து கீழ்கண்ட முறையில் விற்பனை செய்கிறது.

முதல் வகை காய்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது.(உள்ளூரில் கிடைக்கும் விலையை விட வெளிநாட்டில் விலை அதிகம் கிடைக்கின்றது. அதனால் உள்ளூரில் விலை ஏறினாலும் அவர்களுக்கும் அரசுக்கும் அதைபற்றிய கவலை எதுவுமில்லை)

இரண்டாம் வகை காய்கறி அந்த காய்கறி கிடைக்காத இந்திய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.(இதனால் பிரதான உணவுப்பொருளாக அதை பயன்படுத்தும் உள்ளூரில் விலையேற்றம், வெளி மாநிலத்திலும் அதிக விலையில் விற்றுக்கொள்ளலாம்)

மூன்றாம் வகை காய்கறி உள்ளூர் ரிலையன்ஸ் ஃபிரஷ் அங்காடிகள் மூலம் விற்பனை(இது சந்தை விலையைவிட 1 ரூபாய் அல்லாது 2 ரூபாய் குறைவு என சொல்லப்படுகிறது. இவர்களின் ஏகபோக கொள்முதலால் சந்தையில் தேவைப்படு அதிகரித்து சந்தைவிலை ஏறிவிடுகிறது. பின்னர் என்ன ரிலையன்ஸ் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடமிருந்து ஏகபோக கொள்முதல் செய்து அதை குளிர் பதன களஞ்சியத்தில் சில நாட்களுக்கு பதுக்கிவைத்தி்ருந்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. இது உணவுப்பதுக்கல் சட்டப்படி குற்றம். ஆனால் நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு இயந்திரம் கையூட்டுபெற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

உதாரணமாக கடந்த மாதம் 3 ரூபாய்க்கு விற்ற கிலோ தக்காளி இன்று 32 ரூபாய்க்கு சந்தையில் விற்கிறது. கடந்த மாத ரிலையன்ஸ் விலை ரூ6 இந்த மாத ரிலையன்ஸ் விலை ரூ 30. இந்த தக்காளி கடந்த மாதம் ரூ4 க்கு வாங்கப்பட்டிருப்பதாக கொண்டால் பதுக்கலுக்காக அதன் குளிர்பதன களஞ்சிய செலவு உள்பட அதன் தற்போதைய கிலோ விலை ரூ6 க்கு மட்டுமே பிடிக்கும். ஆனால் விற்பனை விலை 30. லாபம் ரூ24. இதுதான் பகற்கொள்ளை மற்றும் உணவுப்பொருள் பதுக்கல் என்று 1960 களில் சொல்லிக்கொண்டிருந்தானர். இந்த முறை வணிகத்தினால் இந்தியா 1930 முதல் 1970 இல் பசுமைப்புரட்சி வரை பாதிக்கப்பட்டு வறட்சி மற்றும் பட்டினிசாவை சந்தித்துக்கொண்டிருந்தது. பின்னர் அரசு எல்லாவற்றையும் ரேஷன் கடைகளில் விற்க தொடங்கிய பிறகு பெரும் வணிகர்களில் ஏமாற்றுவேலை மற்றும் பதுக்கல் வணிகம் முடிவுக்கு வந்தது. இப்பொழ்து மீண்டும் பதுக்கல் வணிகம் புதிய பெயரில் புதியா அவதாரம் அரசின் ஆதரவுடன் அமுலுக்கு வந்துள்ளது.

நான்காம் வகை காய்கறி (அழுகலுக்கு சற்று முந்திய நிலையில் இருப்பது) ஹோட்டல்களுக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Sunday, September 2, 2007

புதிய பொருளாதாரமும் வறுமைகோடும்

தேசிய முறை சாரா தொழிலாளர் கமிஷன் இந்த மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் முறை சாரா தொழிலாளர்கள் 45.7 கோடி பேர் உள்ளனர் என்றும் இவர்கள் கட்டிடம் கட்டுதல், விவசாயகூலிகள், உள்கட்டமைப்பு துறையில் பணிபுரிதல் மற்றும் ஒப்பந்த தொழில், மீன்பிடித்தல், நெசவு என்று பல்வேறுபட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 39.4 கோடிபேர்(80%) தினக்கூலியாக வெறும் ரூ.20 மட்டுமே(அரை டாலருக்கும் கீழ்) பெறுகின்றனர். தேசத்தின் வளர்ச்சி எல்லா தரப்பினரையும் சென்றடையவில்லை என்று தேசிய முறைசாரா தொழிலாளர் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கை பற்றிய செய்திகள் கிடைக்கும் இடங்கள் http://economictimes.indiatimes.com/8_out_of_10_working_Indians_earn_less_than_Rs_20_a_day/rssarticleshow/2272128.cms http://www.hinduonnet.com/thehindu/holnus/002200708100324.htmபுதிய பொருளாதார கொள்கைகள் 1991 இல் அறிவிக்கப்பட்டது. தேசத்தில் 1990 ல் மாத சம்பளம் ரூ.500கீழ் வருமானம் பெறுவோர் வறுமைக்கோடின் கீழ் வாழ்வதாக அரசு அன்று அறிவித்தது. அது இன்றளவும் அதே அளவுதான் உள்ளது. அதனால் இன்று வெறும் 24%(தோராயமாக 24 கோடி பேர்) மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக அரசு பெருமையுடன் சொல்லிவருகிறது. இதை தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் சரியான அளவுகோளாக இருக்கும். 1990 இல் ஒரு கிராம் தங்கம் ரூ.250 மட்டுமே. எனவே அன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தவர்கள் 2கிராம் தங்கம் வாங்க முடியும். அப்படியென்றால் இன்று இரண்டு கிராம் தங்கம் ரூ1650 க்கு விற்கப்படுகின்றது. எனவே விலைவாசிப்புள்ளியுடன் ஒப்பிடும்போது இன்று ரூ1600 க்கு கீழ் சம்பளம் பெறுவோர் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்தானே? ஏன் இந்திய அரசு இதை உயர்த்த மறுக்கின்றது? ஏழ்மையை ஒழித்துவிட்டோம் என்று பசப்பவா? மேலே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி நாட்டின் மக்கள் தொகையில் 40% பேர் மாத ஊதியமாக வெறும் ரூ600(விடுமுறை சம்பளம் எதுவும் கிடையாது எனவே விடுமுறைநாட்களை கழித்தால் இது இன்னும் குறையும்)க்கு கீழ் பெறுகின்றனர். அப்படியானால் அரசு கூறிய 24% பேர் புள்ளிவிவரம் ஒரு ஏமாற்றுவேலை என்றுதானே பொருள். ஆக மாத ஊதியம் 1600 ரூபாயை வறுமைக்கோடு என்று அறிவித்தால் நாட்டில் ஏழ்மையானவர்கள் ஏறத்தாழ 60% என்கிற நிலையை எட்டும். அதே வேளையில் 10லட்சம் டாலர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதையும் அந்த கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது. இருக்கின்றவனிடம் இருந்து எடுத்து இல்லாதவருக்கு கொடுப்பது தருமம். ஆனால் இங்கே இல்லாதவனிடம் இருந்து பிடுங்கி இருப்பவனுக்கு கொடுத்து அவனை செல்வச்செழிப்பில் மிதக்க வைக்கும் மாபெரும் கொடுமையை அரசு செய்து வருகின்றது என்பதை இது காட்டுகிறது. ஆகக்கூடி இந்திய அரசு புதிய பொருளாதார கொள்கையை ஏற்ற பின்னர் ஏழ்மை அதிகரித்துள்ளதுடன் ஏழை பணக்கார இடைவெளியும் அதிகரித்துள்ளது. சோஷலிச பொருளாதார காலத்தில் இந்த இடைவெளி தொழில்களின் தேசியமயமாதல் காரணமாக குறைந்து வந்துள்ளது. ஏழ்மையும், வறட்சியும் 1947 ஆம் ஆண்டு நிலவ்ரத்துடன் ஒப்பிடும்போது 1990 பாதியாக குறைக்கப்பட்டிருந்தது. ஏழைகள் பலர் கல்வி காரணமாக முன்னேற்றம் பெறத்தொடங்கினர். ஆனால் புதிய பொருளாதார கொள்கையில் ஏழைகள் புதியதாக உருவாகியுள்ளனர். இதுதான் இந்திய தேசம் வளர்கிறது(ஏழ்மையில்) என்று சொல்லப்படுகிறதோ?