Monday, April 28, 2008

மண்ணில் புதைந்த ரோஜாக்கள்

விதியின் கைகள் மட்டுமல்ல, அதன் விரல்கள் கூட மிக வலியது போலிருக்கிறது. செவிலியரின் விரல்களில் இருந்து சிரிஞ்ச் வடிவில் சிரித்த விதி, பொன் போன்ற நான்கு மழலைகளை புதைகுழிக்கு அனுப்பிவிட்டது. ஆம்! திருவள்ளூர் மாவட்டத்தில் விதி தட்டம்மை தடுப்பூசி வடிவத்தில் வந்து நான்கு தளிர்களைச் சாய்க்கும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? பிறந்து பத்து மாதங்கள் முடிவடைவதற்குள் அந்த மழலைகளை மரணத்தின் பசிக்குப் பறிகொடுத்து விட்டு, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் அதன் பெற்றோர்கள்.

அந்தச் சம்பவம் நடந்த நாளை கறுப்புப் புதன் என்றுதான் சொல்ல வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டையில் உள்ள கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த செவிலி ஒருவர், வீடுவீடாக குழந்தைகளுக்கு தட்டம்மை (மீசிலியஸ் வேக¢சின்) தடுப்பூசி போட வந்திருக்கிறார். முதலில் மோகன், ஒளியராணி தம்பதியின் ஒரே குழந்தையான மோகன ப்ரியாவுக்கு அவர் ஊசி போட்டிருக்கிறார்.

அடுத்ததாக சுகந்தியின் குழந்தை பூஜாவுக்கு ஊசி குத்தப்பட்டுக் கொண்டிருந்தபோதே மோகனப்ரியாவுக்கு லேசாக வலிப்பு வந்திருக்கிறது. ‘ஊசி குத்திய வலியால் மோகனப்ரியா துடிக்கிறாள், வேறு ஒன்றுமில்லை’ என்ற எண்ணத்தில் மூன்றாவதாக இருந்த அற்புதம் என்பவரின் குழந்தை நிவேதா நந்தினிக்கும் ஊசி போட்டிருக்கிறார், அந்தக் கடமை தவறாத செவிலி. அவ்வளவுதான். மூன்று குழந்தைகளுக்கும் வலிப்பு ஏற்பட்டு, வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியிருக்கிறது. பிஞ்சு உடல்கள் நீலம்பாரிக்க ஆரம்பித்தன.

துடித்துப் போனார்கள் பெற்றோர்கள். ‘அய்யோ நான் என்ன செய்வேன்?’ என்ற அலறலுடன், அந்தச் செவிலியின் துணையோடு குழந்தைகளைத் தூக்கிக¢ கொண்டு கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடியிருக்கிறார்கள். அங்கே குளுக்கோஸ் ஏற்றியும் நிலைமை சீர்படவில்லை. அங்கிருந்த செவிலியர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் கேட்டிருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் வந்து விடுகிற வாகனமா? ‘அதோ இதோ’ என்று திருவள்ளூர் மருத்துவமனையில் இருந்தவர்கள் சால்ஜாப்பு சொன்னார்களே தவிர, ஆம்புலன்ஸைக் காணோம்.

இங்கோ அழுகையும், கதறலுமாக பெற்றோர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்க, ஒருமணி நேரம் இந்த காத்திருப்பிலேயே ஓடிப்போனது. இனிமேலும் காத்திருந்து பயனில்லை என்ற நிலையில், கூலிவேலை செய்து குருவி மாதிரி சேர்த்த பணத்தில் நானூறு ரூபாயைக் கொடுத்து வாடகை கார் ஏற்பாடு செய்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் பெற்றோர்கள். அங்கே குழந்தைகள் ஏற்கெனவே இறந்து விட்டதாக உதட்டைப் பிதுக்கி விட்டார்கள் டாக்டர்கள். அவ்வளவுதான். ஆபத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய தடுப்பூசியே அந்த மூன்று குழந்தைகளுக்கும் எமனாகி விட்டது.

குழந்தை நந்தினியை இழந்து குமுறிக் கொண்டிருந்தார் அவளது தந்தை ஏழுமலை. குழந்தையின் தாய் அற்புதத்தை தேற்றக்கூட திராணியில்லாமல் இருந்த அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

‘‘அய்யா எனக்கு ஐம்பத்தஞ்சு வயசாகுது. என் மனைவி அற்புதத்துக்கு நாற்பத்தஞ்சு ஆகுது. முதல் புருஷனால் அவளுக்கு இருபது வருஷமாகக் குழந்தை இல்லை. குழந்தை ஏக்கத்தில் இவள் பைத்தியக்காரி மாதிரி ஆனதால் புருஷன்காரன், இவளை விட்டுவிட்டுப் போய்விட்டான். ஆதரவில்லாத இவளை என் மனைவியே எனக்கு இரண்டாந்தாரமாகக் கட்டிவச்சா. மூணு வருஷம் கழிச்சு இவளுக்குக் குழந்தை உண்டானபோது இவ அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இந்த வயசில் அபூர்வமா பிறந்த குழந்தையை பொத்திப் பொத்தி வளர்த்தா. இப்போ அந்தக் குழந்தையைப் பறிகொடுத்திட்டு பைத்தியக்காரி மாதிரி இவ தனியா கதறிக்கிட்டு இருக்கா பாருங்க. இந்த வயசில இனி எங்களுக்கு எப்படிய்யா திரும்பவும் குழந்தை பிறக்கும்?’’ என்று தோளில் கிடந்த துண்டால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழத்தொடங்கினார் ஏழுமலை.

‘‘என் குழந்தையை உயிரோடு தரச் சொல்லுங்கய்யா. காசு, பணம் எங்கிட்ட கொஞ்சம்தான் இருக்கு. இருந்தாலும் என் மகளை ராணி மாதிரி பார்த்துப்பேன்’’ என்று நம்மைப் பார்த்துக் கேட்ட அற்புதத்தின் முகத்தில் தெரிந்த சோகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

பலியான மற்றொரு குழந்தை மோகனப்ரியாவின் தந்தை மோகனிடம் பேசினோம். ‘‘குழந்தைக்கு ஊசி குத்தியதும் வாயில் இருந்து நுரை தள்ளியதைப் பார்த்து என் மனைவி மயங்கி விழுந்து விட்டாள். குழந்தை இறந்தது கூட இன்னும் தெரியாமல் பித்துப் பிடித்தவள் போல் மகளுக்காக வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறாள். அய்யோ, நான் வெறும் கையோடு போனால் அவள் செத்தே போய்விடுவாளே’’ என்று தலைப்பிரசவத்தில் பிறந்த மகளை இழந்த துயரத்தில் கதறி அழுதார் மோகன்.

குழந்தையை இழந்த இன்னொரு தாய் சுகந்தி, அழுது கண்ணீர் வற்றிப் போன நிலையில் தன் கணவர் அல்லிமுத்துவின் தோளில் சாய்ந்து தேம்பிக¢ கொண்டிருந்தார். ‘‘குளுக¢கோஸ் பாட்டிலோடு என் குட்டி மகள் பூஜாவை கையில் ஏந்திக¢ கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தேன். குழந்தை உயிர் போயிடுச்சுன்னு சொல்லி என்னைச் சாகடிச்சிட்டாங்களே.. நடுராத்திரியில எழுந்து பசியில் அழுவாளே என் செல்லம். அவளை அறுத்து சோதனை பண்ணப் போறாங்களாம். ஐயோ! வேண்டாம்னு சொல்லுங்கய்யா!’’ என்று சோகத்தில் குலுங்கினார் சுகந்தி.

இதற்கிடையே, தட்டம்மை தடுப்பூசி திருத்தணி அருகிலும் அதன் வேலையைக் காட்டிவிட்டது. அங்கே வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்த குப்பையா என்பவரின் மகன் லோகேஷ் என்ற பதினொரு மாதக¢ குழந்தையையும் தடுப்பூசி பலி கொண்டு விட்டது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பியும் பலனில்லாமல் குழந்தை லோகேஷ் இறந்து போனான். இந்த இரு சம்பவங்களிலும் தடுப்பூசி குத்திய செவிலிகள் ஜெயலலிதா, பார்வதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதோடு தமிழகம் முழுவதும் தட்டம்மை தடுப்பூசி போடுவது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பென்னலூர், மற்றும் வெங்கிட்டாபுரம் பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி குத்தப்பட்ட நான்கு குழந்தைகள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த மூன்று பெண் குழந்தைகளையும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.சிவாஜி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அமைச்சரிடம் பேசினோம். ‘‘மத்திய அரசு சார்பில், அனுப்பப்படும் தடுப்பு மருந்துகளே நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட தட்டம்மை தடுப்பு மருந்து, அரசின் பொதுத் துறை நிறுவனமான ஹைதராபாத்தில் உள்ள ‘ஹியூமன் பயாலாஜிக¢கல் இன்ஸ்டிடியூட்’டில் இருந்து வாங்கப்படுகிறது. தவறு எங்கு நடந்தது? என்று விசாரணையில் தெரிய வரும். முதல்கட்டமாக, சம்பந்தப்பட்ட தடுப்பு மருந்துகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்’’ என்றார் அவர். அதன்படியே ஆய்வுக்காக இமாசல பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலரிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘நாடு முழுவதும் உள்ள ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடுகிறோம், தகுந்த பயிற்சி பெற்ற ஆரம்ப சுகாதார நிலைய செவிலிகள் அதாவது, மகப்பேறு உதவியாளர்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் போட அனுமதிக¢கப்படுகிறார்கள். குழந்தைகள் இறப்பதற்குக¢ காரணமாக இருந்த மருந்தை 2010_ம் ஆண்டு வரை பயன்படுத்த முடியும். இந்த மருந்தை இரண்டில் இருந்து எட்டு டிகிரி செல்சியஸ் என்ற தட்பவெப்ப நிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஆயுட் காலம் (எக்ஸ்பயரி டேட்) முடிந்த மருந்தையோ அல்லது குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் பராமரிக்கப்படாத மருந்தையோ பயன்படுத்தினால்தான் அது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது’’ என்றனர் அவர்கள்.

மற்றொரு தரப்பு அதிகாரிகள் கூறிய தகவலோ வேறு மாதிரியாக இருந்தன. ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தத் தட்டம்மை தடுப்பூசி மருந்து புனேயில் உள்ள ‘ஸ்ரீராம் வேக¢சின்’ நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு திடீரென ஹைதராபாத் ‘ஹியூமன் பயாலாஜிக¢கல் இன்ஸ்டிடியூட்’டில் இந்த மருந்தை வாங்க ஆரம்பித்தது. புனே நிறுவனம் சப்ளை செய்த ஒரு டோஸ் மருந்தின் விலை எட்டு ரூபாய். ஹைதராபாத் நிறுவனம் ஏழு ரூபாய்க்கு விநியோகம் செய்ய ஒப்புக் கொண்டதால், மத்திய அரசு இப்படி நிறுவனத்தை மாற்றியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரத்தில் உள்ளூர் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்த நிறுவனங்களை மூடக¢கூடாது என்று அங்குள்ள தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புக் காட்டுவதால் அங்கே தடுப்பு மருந்துகள் தொடர்ந்து உற்பத்தியாகி நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி தரமற்ற தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டால் குழந்தைகள் மரணமடைய யாரைக் கேட்க வேண்டும்?’’ என்றனர் அவர்கள். அரசின் அலட்சியமோ? அதிகாரிகளின் அலட்சியமோ? சின்னச்சின்ன ரோஜாக்களை மண்ணுக்குள் போட்டுப் புதைத்துவிட்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்.

ஸீ வெற்றி
படங்கள்: கென்னடி

ஆற்காட்டார் என்ன சொல்லப் போகிறார்?

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் போலியோ, தட்டம்மை உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் பராமரிக்க வேண்டியது அவசியம். மின்சாரம் தடைபடும்போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மருந்துகளை எடுத்து அதற்கென உள்ள பெட்டிகளில் ஐஸ்கட்டிகளுக்கு நடுவே வைத்திருக்க வேண்டுமாம்.

ஆனால், கடந்த சில மாதங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் அந்த மருந்துகளை முறைப்படி பராமரிக்க முடியாமல் போயிருக்கலாம் என்று ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதுதான் கேள்வி.

தனியாருக்குப் போகும் தடுப்பூசி மருந்து உற்பத்தி!

தட்டம்மை தடுப்பூசியால், திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் இறந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் இரண்டு லட்சம் குழந்தைகளுக்கு இதே தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், அவர்களின் கதி என்ன என்று பதறிப்போய் உள்ளனர் தாய்மார்கள்.

இதுபற்றி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களான குன்னூர் லூயி பாஸ்டியர் ஆய்வு நிறுவனம், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், இமாசலப் பிரதேசத்தில் உள்ள கசாலி ஆய்வு நிறுவனம் ஆகியவை லாப நோக்கில்லாமல் கடந்த நூறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றை மூடிவிட்டு தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. ‘இந் நிறுவன மருந்துகள் தரமில்லை, சான்றிதழ் தர மாட்டோம்’ என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வது இவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனமும், பொதுத்துறையும் இணைந்து நானூறு ஏக்கர் பரப்பளவில் போலியோ சொட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை செங்கல்பட்டில் அமைக்க முடிவு செய்துள்ளன. இதற்காக கடந்த வாரம் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அன்புமணி கலந்து கொண்டார். இதுவரை போலியோ மருந்து தயாரிப்பில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத இந்துஸ்தான் நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் தரம் எப்படி இருக்கப் போகிறது?

பல நேரங்களில் காலாவதியான தடுப்பூசி மருந்துகளைக்கூட தனியார் நிறுவனங்கள், புதிய லேபிள் ஒட்டி அனுப்பி வைக்கின்றன. திருவள்ளூர் சம்பவத்துக்கு இதுகூட காரணமாக இருக்கலாம். வரும் காலங்களில் போலியோ தவிர, மற்ற தடுப்பூசி மருந்துகளைப் போடும்போது, டாக்டர்கள் குழுவும், ஆம்புலன்ஸ§ம் தயாராக இருக்க வேண்டும். மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு போதிய அதிகாரம் கொடுத்து, ஒவ்வொரு மருந்தையும் ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு, குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. இல்லாவிட்டால் இறப்புகளைத் தவிர்க்க முடியாது. தடுப்பூசி மருந்து தயாரிப்பை முழுக்க முழுக்க தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிக்காகவே இதுபோன்ற மரணங்கள் ஏற்படுத்தப்படுகிறதா என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது’’ என்று அதிர்ச்சியூட்டினார் அவர்.

நாம் டாக்டர்கள் சங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியைத் தொடர்பு கொண்டோம். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் பிசியாக இருந்தார். கடைசி வரை நம்மால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்றாலும் மத்திய அரசு சார்பில் விசாரணை செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளார்.

Monday, March 17, 2008

தொடாமலேயே ஷாக் அடிக்கும்

சொன்னதும் சொல்லாததும்

பொதுப் பணித் துறையைப் பிரித்து, நீர் ஆதார நிறுவனம் உருவாக்கப்பட்டபோது ஏற்படாத ஐயமும் அச்சமும் மின்வாரியத்திலிருந்து "மின்சாரம் எடுத்துச்செல்லும் தனிஅமைப்பு' ஏற்படுத்தும்போது தோன்றுகிறது என்றால் - அதற்குக் காரணம் இல் லாமல் இல்லை.

"மின்வாரியத்தைத் துண்டாட மாட்டோம்; மின்சாரத்தை எடுத்துச் செல்லும் அமைப்பு தனியார்மயமாகாது' என்று கூறியுள்ள மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, "2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டம் வெளியான ஒராண்டுக்குள்ளாகவே மின்சாரம் எடுத்துச் செல்லும் பிரிவை தனியாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்' என்றும் கூறியிருக்கி றார்.

இதைச் சொன்னவர், அதே 2003-ம் ஆண்டின் மின்சாரச் சட்டம், ஜனவரி 2004-லிருந்து 5 ஆண்டுகளுக்குள், தனியாருக்கும் மின் விநியோக உரிமம் வழங்குவதை வகை செய்திருப்பதுடன், உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் நிபந்தனைகளையும் கூறி யுள்ளதை ஏன் சொல்லவில்லை? மின்சாரம் எடுத்துச் செல்லும் அமைப்பை ஏற்படுத்துவதன் நோக் கமே, மின்விநியோகத்தைத் தனியார்மயமாக்க வகை செய்யும் முன் னேற்பாடுதான்.

மின்விநியோகத்தைத் தனியார் நிர்வகிப்பது புதிய விஷயமல்ல.

தொடக்கத்தில், தனியார்தான் மின்சாரத்தை அரசிடம் பெற்று மக்க ளுக்கு விநியோகிக்கும் ஏஜன்டுகளாக இருந்தனர். மின்விநியோ கத்தை மின்வாரியமே ஏற்றுக்கொண்ட போதும்கூட, கோவை மாநக ராட்சி 1995 வரையிலும்கூட, மின்வாரியத்திடம் மின்சாரம் பெற்று, மின்விநியோகம் செய்யும் தனிஅமைப்பாகவே நீடித்தது. இதனால், பக்கத்து ஊர்களான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் உள்ள மின் கட்டணத்தைவிட (ஒரு யூனிட்டுக்கு 5 காசுகள்?) அதிகம் வசூலித்த தால், தொடரப்பட்ட வழக்கின் காரணமாக மீண்டும் மின்வாரியமே இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

ஆக, மின்விநியோகம் தனியார் நிர்வகித்திருப்பது புதிய விஷய மல்ல என்றால் ஏன் இந்த அச்சம் என்று தோன்றும். கோவை மாநக ராட்சியின் மின்கட்டணம் சிறிய அளவில் வேறுபடுவதை காண முடிந்ததால் நீதிமன்றத்தை அணுக முடிந்தது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் மின்விநியோகஸ்தர்கள், சிமென்ட் ஆலைகளைப் போல சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாமல் வேறு பெயர்களில் கட்டணத்தை உயர்த்தினால் யாருக்குத் தெரியும்? முன்னர் மின்விநியோகத்திலும், பஸ் போக்குவரத்திலும் ஈடுபட்ட தொழிலதிபர்கள் நியாயமான லாபத்தை மட்டுமே எதிர்பார்த்தவர்கள்.

அவர்களில் ஒரு சிலர் அரசியல்வாதிகளாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய சூழலில், அரசியல்-சார்-தொழிலதிபர்கள் மட்டுமே தனி யார்மயமாகும் அரசுத் துறைகளை ஆக்கிரமிக்கும் பணவலிமை உள் ளவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுமைக்கும் அல்லது நகரங்கள் வாரியாக மின்விநி யோக உரிமத்தை ஒரே நிறுவனமோ, அல்லது ஒரே நிறுவனத்தின் பல பிரிவுகளோ, உள்-ஒப்பந்தமாகவோ எடுத்துக்கொள்வது அரசி யல்-சார்-தொழிலதிபர்களுக்கு மிக எளிமையான விஷயம்.
மின்சாரத்தை எடுத்துச் செல்லும் அமைப்பை தனியார் மயமாக்கி னாலும், அரசே நிர்வகித்தாலும் பெரிய வேறுபாடு இருக்காது. ஏனெ னில், மின்சாரத்தைக் கொண்டுசேர்க்க அனுமதிக்கப்படும் ஒரு சொற் பத் தொகை (வீலிங் சார்ஜ்) மட்டுமே அந்த அமைப்புக்குக் கிடைக் கும். ஆனால் மின்விநியோகம் அப்படியல்ல. லாபம் உள்ளடக்கிய தாக அரசு அனுமதிக்கும் கட்டணத்துடன் சேவைக் கட்டணம், கேபிள் பராமரிப்புக் கட்டணம், மிகைப்பயன்பாடுக்கான உபரி-கட்ட ணம், மீட்டர் பராமரிப்புக் கட்டணம் என புதுப்புது சொல்லாடல்க ளில் ஒவ்வொரு இணைப்புக்கும் குறைந்தது ரூ.10 வசூலித்தாலும் மொத்த லாபம் எத்தனை ஆயிரம் கோடியாக இருக்கும் என்பதை கணக்கிடுவது முடியாத செயல் அல்ல.

இதை நிர்வகிப்பவர்கள் அரசியல் பலம் (எதிர்க் கட்சி, ஆளும் கட்சி என்பது ஒரு விஷயமே அல்ல) உள்ளவர்கள் என்பதால் பொது மக்கள் கேள்வி கேட்கவும் முடியாது.
மின்சாரம் தொட்டால் ஷாக் அடிக்கும். தனியார் மின்விநியோ கமோ தொடாமலேயே ஷாக் அடிக்கும்.

Thursday, January 24, 2008

பங்கு சந்தை வீழ்ச்சி

கடந்த ஒரு வாரமாகவே பங்கு சந்தை பலத்த சரிவுக்குள்ளாகி வருகின்றது. நேற்று 10% வரை சரிந்து பின்னர் 3% மீண்டு முடிவில் 7% இழப்பில் முடிந்திருந்தது. நேற்றைய தின துவக்கத்திலேயே 500 புள்ளிகள் இழப்புடன் மும்பை பங்கு சந்தை துவங்கியது. நேரம் செல்ல செல்ல சிறு முதலீட்டாளர்களூம் F & O முதலீட்டாளர்களும் பயத்தின் காரணமாக ஏகத்திற்கும் பங்குகளை விற்க தொடங்க பிற்பகலில் 2100 புள்ளிகள் வரை சரிவடைந்திருந்தது. எனினும் முதலீடு நோக்கில் கடைசி அரை மணி நேரத்தில் 700 புள்ளிகள் உயர்ந்து 1400+ புள்ளிகள் இழப்புடன் முடிந்தது.

இன்று காலை தொடங்கியதுமே முதலீட்டாளர்களின் பயம் காரணமாக எடுத்த எடுப்பில் 2000+ புள்ளிகள்குறைய பங்கு சந்தை சுமார் 1.5 மணிநேரம் தற்காலிகமாக மூட்டப்பட்டது. மேலும் F & O விற்பனையும் நாள் முழுவது நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் எல்லா முதலீட்டாளர்களூம், தரகர்களும் அரசின் தலையீட்டை எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு கடந்த 2 நாட்களாகவே இருக்கின்றது. அரசு தலையிடாததை கண்டித்து எல்லா வலைதளங்களிலும் பதிவர்களும் முதலீட்டாளர்களும் நிதி அமைச்சரை திட்டி தீர்த்தனர். இன்று காலை அதனால் வேறு வழியின்றி நிதியமைச்சர் திருவாய் மலர்ந்தார்.

அதாவது முதலீட்டாளர்கள் பயம் கொள்ள வேண்டாம். தரகர்களுக்கு தேவையான லிக்விடிட்டி வழங்கப்படும். அதற்காக LIC, UTI ஆகிய நிறுவனங்கள் பங்குகளை வாங்கும் என்று அறிவித்தார். அதன் பின்னர் சந்தை சரிவிலிருந்து மீளத்தொடங்கியது.

இதே காங்கிரஸ் அரசில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது 10 வருடங்களுக்கு முன்னர் இதே ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டுமென்று விருப்பம் மிகக்கொண்டு உலக வங்கியின் வலியுறுத்தல் காரணமாக முயற்சித்தார். அதை அந்த நிறுவன தொழிலாளர்களும் முகவர்களும் பெரிய முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டு சென்று 1 கோடி கையெழுத்துகளை மக்களிடம் பெற்று(சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நானும் ஒரு கையெழுத்து போட்டிருக்கின்றேன்.) குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க தனியார் மயம் என்னும் முயற்சியை உடனடியாக அரசு கைவிட்டது. அதன் பின்னர் தனியாரும் காப்பீடு துறையி அனுமதிக்கப்பட்டு ஏராளமான திடீர் நிறுவனங்கள் முளைத்து LIC ஐ சமாளிக்க முடியாமல் விரைவில் காணாமல் போயின(உம். AMP Sanmar). காரணம் அது கடைப்பிடித்த நேர்மை மற்றும் தரமான சேவை. உச்சகட்டமாக ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் காப்பீடு நிறுவனம் மகாராட்டிரத்தில் தடை செய்யப்பட்டதும் நடைபெற்றது.

அன்று LIC என்னும் தங்க முட்டையிடும் வாத்து தனியார் மயம் என்கிற கத்தியால் வெட்டு பட்டிருந்தால் இன்று பங்கு சந்தை காப்பாற்ற ஒரு நிறுவனம் இல்லாமல் போயிருக்கும். அரசும் முதலீட்டாளர்களை கைவிட்டு தனியார் மயத்தை ஒழித்திருக்கும். என்ன செய்ய தனியாரை காக்கவும் அரசு நிறுவனமே தேவை.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கூற்றை அரசு மீண்டும். மெய்ப்பித்திருக்கின்றது. மேலும் சந்தையில் இந்த வீழ்ச்சி தொடருமானால் அரசு நிச்சயம் PF பணத்திலும் கைவைக்க கூடும்.

சந்தையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக இன்று பங்கு தரகள் பரிமாரிக்கொள்ளும் வாசகம்

Reliance On - Market Gone.

பங்கு சந்தை வீழ்ச்சியில் ரிலையன்ஸ் பவர் ஐபிஓவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுதான் வீழ்ச்சியை துவக்கி வைத்தது. ஆரம்பத்தில் முதல் நாளிலெயே 10 மடங்கு விண்ணப்பங்கள் குவிய அப்பொழுது உடனடியாக பங்கு சந்தை.சிதம்பரம் நாட்டின் அடிப்படை மிகவும் வலிமையாக இருக்கின்றது என்று மார்தட்டினார். அவருடைய நம்பிக்கை இரண்டு நாட்களில் அவநம்பிக்கையாகிவிடும் என்று அப்பொழுது அவர் உணர்ந்திருக்க மாட்டார்.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய எல்லா முதலீட்டாளர்களும் பணத்தை பங்கு சந்தையிலிருந்து எடுக்க தொடங்கியதால் முதல் கட்ட வீழ்ச்சி தொடங்கியது. அதை இறுதி மூச்சில் இருக்கும் அமெரிக்க பொருளாதாரம் தன்பங்கிற்கு உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதனால் வெளிநாட்டு முதலீடு ஏகத்திற்கும் சந்தையிலிருந்ந்து திரும்பபெறப்பட்டது. இதனாலும் சந்தை சரிந்தது. சந்தை சரிவிற்கு முன்னர்தான் ரிலையன்ஸ் பவர் 79 மடங்கு விண்ணப்பம் பெற்றதாகவும் அது சாதனை என்றும் அனில் அம்பானி உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்றும் பத்திரிகைகள் பரபரத்தன. எல்லாமே 2 நாட்கள்தான்.

பங்குச் சந்தை இந்த அனில் அம்பானியை இன்று 1000+ இடத்திற்கும் முகேஷ் அம்பானியை 101 வது இடத்திற்கும் டி.எல்.எஃப். உரிமையளர் கே.பி.சிங்கை 250 ஆவது இடத்திற்கும் உலக அளவில் அழைத்து சென்றுள்ளது. இதன் உச்சமாக ரிலையன்ஸ் பவர் பங்கு கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுது செக்குகளுக்கு ஸ்டாப் பேமண்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன(இதை வதந்தி என்று அனில் அம்பானி கூறியுள்ளார்). இதிலும் ரிலையன்ஸ் சாதனை படைக்கும் என்று நம்பலாம். லிஸ்டிங்கில் 1000 ரூபாய்க்கும் மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் பவர் இப்பொழுது ஒளியிழந்து 450க்காவது வெளியாகுமா இல்லை இன்னும் கீழே வெளியாகுமா என்று எதிர்பார்க்கும் அளவில் உள்ளது.( 16.01.2008 அன்றே கிரே மார்கெட் பிரீமியம் என்றழைக்கப்படும் தொகை 470 இலிருந்து 420 ஆகவும், வெளியீட்டின் இறுதி நாளன்று 320 ஆகவும் நேற்று 150 ஆகவும் தேயந்து போனதிலும் ரிலையன்ஸ் பவர் சாதனை புரிந்துள்ளது.)

இன்றைய பங்கு மார்கெட் வார்த்தை Reliance Power On - India Gone.(இது ரிலையன்ஸ் பவர் விளம்பரங்களில் Riliance Power On - India On என்று வரும்).

விரைவில் அமெரிக்கா பொருளாதார சரிவை(Recession) அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அது அமெரிக்க தேர்தலுக்கு பிறகாவது அறிவிக்கப்படும். அப்பொழுது சந்தை மேலும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நலம் என்பதே இறுதி நீதி.

Monday, January 21, 2008

123 அணு ஒப்பந்தம்

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி நிறையவே பேசப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்று அணுஆயுத ஒழிப்பு மற்றும் அமை திக்கான மக்கள் இயக்கங்களும், பொது அமைப்புகளும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.

இந்த ஒப்பந்தம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று மட்டுமல்ல, அமைதிக்கு எதிரானது, நிலைத்த எரிசக்தி உருவாக்கத்துக்கு எதிரானது, சுயசார்பு பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் மக்கள் கருத்தை அறிவது இருக்கட்டும், நமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்ட ளிக்கக்கூட மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி, மதவாதக் கட்சி என்றால், காங்கிரஸ் அமெரிக்காவின் அடிமைக்கட்சியாக இருக்கிறது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.


இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின்நிலையங்களும், நமது மின்சாரத் தேவையில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே தற்போதுள்ள பூர்த்தி செய்கின்றன. இதை 7 சதவிகிதமாக உயர்த்தப் போகிறார்களாம்.
அதற்காகத்தான் இந்த ஒப்பந்தமாம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது. 3யை 7 ஆக்கவா, பிரதமர் சவால் விடுக்கிறார்? பதவியை ராஜினாமா செய்வேன் என்று மறைமுக மிரட்டல் விடுக்கிறார்?


மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் (!) கைகளில் இந்தியா இருப்பது எவ்வளவு மோசமானது என்று இப்பொழுது புரிகிறது.


இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான். இந்தியா இனி அமெரிக்க அடிமை. நமது வெளியுறவுக் கொள்கைகள் இனி அமெரிக்காவின் கட்டளைப்படியே இயங்கும். இரானை அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லையா. இந்தியாவுக்கும் பிடிக்காது. எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய அணுஆற்றல் அவசியம் என்று மன்மோகன் சிங் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். சரி, இதே எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யத்தானே இரானுடன் குழாய் மூலம் எண்ணெய் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதை ஏன் இரண்டாம் பட்சமாக ஒதுக்க வேண்டும்.


அப்படியானால் அணுசக்தியை அதிகரிப்பது, எரிசக்தி ஆகிய இரண்டும் இந்த ஒப்பந்தத்தைப் பொருத்தவரை முக்கியமானவை அல்ல என்பது புரிகிறது. அதைத் தாண்டி எது முக்கியம்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. சீனாவின் பொருளாதார போட்டியைச் சமாளிக்க பாகிஸ்தான் பயன்படுமா என்று அமெரிக்கா பரிசோதித்துப் பார்த்தது. பாகிஸ்தான் ஒத்துவரும் என்று தோன்றவில்லை. அதைத் தொடர்ந்து அவசரஅவசரமாக இந்தி யாவை கபளீகரம் செய்யப் பார்க்கிறது அமெரிக்கா. அதன் முழுமையான வெளிப்பாடுதான் இந்த ஒப்பந்தம்.


இப்படி இந்தியாவின் எதிர்காலம், வெளியுறவுக் கொள்கைகள், மற்ற நாடுகளுடனான உறவில் ஏற்படும் விரிசல் போன்றவற்றைப் பற்றி மக்கள் கருத்தை துளியும் அறியாமல், ஒப்பந்தத்தை நிறை வேற்றுவது தவறு என்று இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. மக்கள் சார்பில் இடதுசாரி கட்சிகள் ஏற்படுத்திய இந்த நெருக்கடி வரவேற்கத்தக்க அம்சம். நினைத்துப் பாருங்கள், பாரதிய ஜனதா ஆட்சியில் தொடர்ந்திருந்தால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை அனைத்து எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தி இருப்பார்கள். அதுதான் அந்தக் கட்சியின் கொள்கை.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் சாதகமா, பாதகமா என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம் முழுமையாக ஓராண்டு விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் என்ன நடந்தது? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு விடுதலை நாள், குடியரசு நாளின்போது மார்தட்டிக் கொள்ளும் இந்தியா, எந்த வகையிலும் ஜனநாயகத் தன்மையுடன் நடந்து கொள்ளாததையே இது காட்டுகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குள் நேரடியாக கால்பதித்துள்ள அமெரிக்கா, இந்தப் பகுதியில் உள்ள நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை நேரடியாக கட்டுப்படுத்தத் தொடங்கும்.


இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அமைதி முயற்சிகளைத் தொடராமல், ஆயுதப் போட்டியில் இறங்கும். ஆயுத விற்பனையின் ஒரு பாகமாகத்தான் ஆப்கானிஸ்தான், இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியது. அவை முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில், இந்த ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்குமே அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை ஏற்கெனவே விற்று வருகிறது. சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வருகை அதன் ஒரு பகுதிதான்.

இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய சூரியசக்தி, காற்றாலை, கடல்அலை, மனித உழைப்பு போன்றவற்றை மேம்படுத்துவது பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கப்படுவதில்லை. இந்த மாற்று எரிசக்திகளை மேம்படுத்துவதில் அரசு அக்கறை காட்டுவது போல் பெயருக்கு மட்டும் செயல்படுகிறது. மாற்று எரிசக்திகள் மூலமே நமது எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
உண்மையிலேயே அரசு கூறுவது போல் அணுசக்தி சிறந்தது என்றால், அது பற்றி வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கலாமே. விவாதம் நடத்தலாமே. எல்லா நேரமும் ஏன் மூடிமறைத்து நடத்த வேண்டும்?

அடுத்து...


இதுபோன்று நாட்டின் பாதையையே மாற்றியமைக்கக் கூடிய ஒப்பந்தங்கள், சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போன்றவற்றைப் பற்றி ஜனநாயக ரீதியிலான எந்த ஆலோசனைகளும் நடத்தாமல் நிறைவேற்ற இந்திய அரசியல் சாசனத்தில் வழியுள்ளது. முதலில், இது போன்ற ஒப்பந்தங்கள் பற்றி முன்கூட்டியே அறிவித்து, பொது விவாதம் நடத்த வேண்டியது கட்டாயம் என்று அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதில் நமது கருத்தை உறுதியாக வெளிப்படுத்த, நாம் ஒவ்வொரு வரும் ஓட்டளிக்கும் நடைமுறை வேண்டும். இதுவே நமது அடிப்படை கோரிக்கையாக இருக்க வேண்டும். (விஷயமே என்ன வென்று சொல்லாமல் கருத்துக் கணிப்பை நடத்தி தொலைக்காட்சி அலைவரிசைகள், இதழ்கள் தங்களுக்கு வசதியான முடிவை பிரபலப்படுத்துகிறார்கள்.)


இந்த ஒப்பந்தத்தின் எந்த அம்சத்துக்கும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதே உரிமை இந்தியா நாடாளுமன்றத்துக்கு இல்லை. அப்படியானால், இது அடிமை ஒப்பந்தம் இல்லாமல் வேறு என்ன? ஓர் அடிமையே, 'என்னை உங்கள் அடிமையாக வைத்துக் கொள்ளுங்கள். நான் நன்கு உழைப்பேன்' என்று கையெழுத்திட்டு ஒப்படைத்துக் கொண்டது போல் இருக்கிறது.


இந்த ஒப்பந்தம் மூலம் நமது இயற்கை வளம், அறிவு, குறைந்த கூலியில் உழைப்பு ஆகியவை அமெரிக்க முதலாளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. பொருளாதார மேதைகள் ஒட்டுமொத்தமாக நாட்டையே விற்க ஒப்பந்தம் இட்டுள்ளனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


வெள்ளையர்களை வெளியேற்றி நாடு விடுதலையடைந்து 60வது ஆண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், புதிய காலனி ஆதிக்கத்துக்கு மத்திய அரசே வரவேற்று வழியமைத்துக் கொடுத்துள்ளது.

(இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய அருணாராய், மேதா பட்கர், சந்தீப் பாண்டே அறிக்கை)

Thursday, January 17, 2008

ப. சிதம்பரத்துக்கு பாரத ரத்னா விருது பரிந்துரை

நாட்டில் அவரவருக்கு பிடித்த தலைவருக்கு அவரவர் பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏதோ எனக்கு பிடித்த இந்திய தலைவருக்கு நானும் பரிந்துரைக்கலாம் என்று நேற்று முழுக்க மல்லாக்க படுத்து யோசித்து பார்த்ததில் ஒரு ஒப்பற்ற தமிழர் ஒருவர் என் மனதில் தகுந்த காரணங்களுடன் தோன்றினார். அவ்ர் குறித்து என்க்கு தோன்றியவை


நம் இந்திய நாட்டில் கீழ்கண்ட வற்றில் அபரிமிதமான முன்னேற்றத்திற்காக உழைத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க நான் ஆதரிக்கின்றேன்

1. 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை புரிந்துகொள்ளூம் வகையில் திட்டங்களை திட்டமிடு வடிவமைத்து நாட்டின் மக்கள் தொகை குறைப்பில் மாபெரும் தொண்டாற்றியுள்ளார்.

2. பாகிஸ்தான், இலங்கை, சோமாலியா முதலிய தேசங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு குழந்தைகள் சாவில் இந்தியாவை முன்னனிக்கு கொண்டுவந்து சாதனை படைத்துள்ளார்.

3. 4 கோடி ஏழை இந்தியர்களின் காய்கறி விற்கும் உரிமையை பறித்து 4 மிகப்பெரிய பணக்காரர்களை உருவாக்கி பெரும் தொண்டாற்றியுள்ளார். இதனால் 18 லட்சம் பேருக்கு புதியதாக வேலைவாய்ப்பும், 2 கோடி பேருக்கு உடனடி வேலை இழப்பும் ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

4. பங்கு சந்தை சரியும்போதெல்லாம் குரல்கொடுத்து அதை மட்டும் வளர்த்தும், விவசாயிகள் தற்கொலையின் போதும், விவசாய பொருள்களின் உற்பத்தி குறைவின் போதும் கணாமலும் இருந்தும் பட்ஜெட்டில் காகிதத்தில் மட்டும் விவசாயத்தை வளர்க்க உறுதியளித்தும் தொண்டாற்றியுள்ளார்.

5. வறுமைக்கோட்டிற்கான அடிப்படை மாத வருமானத்தை 1990 இலிருந்து தொடர்ந்து ரூ.500 லேயே நிலைநிறுத்தி வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளை 27% ஆக குறைத்து சாதனை படைத்துள்ளார்.

6. அவரது தொகுதியிலேயே குறைந்த பட்ச வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 80ரூ தினக்கூலியை ரூ60 ஆக குறைத்து வழங்கி மக்களுக்கு ஒப்பற்ற சேவையாற்றியுள்ளார்.(இதில் ரூ.20 ஊழல்)

7. நாட்டில் 80% அமைப்பு சாரா தொழிலாளிகளின் தினசரி கூலியை ரூ.20 ஆக பல ஆண்டுகளாக நிலைநிறுத்தி சாதனை புரிந்துள்ளார்.

8. ஊக பேர வணிகத்தில் உணவுப்பொருள்களை உட்படுத்தி நாட்டு மக்களுக்கு திடீரென 3 ஆண்டுகளில் 200% விலையுயர்வை கொடுத்து அற்புதமான சேவை செய்து அதன் மூலம் நாட்டின் ஜி.டி.பி யை உயர்த்தி 9.5% ஜி.டி.பி வளர்ச்சியை உறுதி செய்துள்ளார்.

9. ஏகத்திற்கும் எல்லோருக்கும் வங்கிகளில் கடன் கிடைக்க செய்து பணவீக்கத்தை உயர்த்தி அதன் மூலம் எல்லா பொருள்களின் விலையையும் உயர்த்தி அதன் கணக்கில் ஜி.டி.பி ஐ உயர்த்தி அற்புத சேவைகளை புரிந்துள்ளார்.

இப்படி பல்வேறு காரணங்களுடன் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி ஐயும் பல்வேறு பொருள்களின் விலை உயர்வு மூலம் உயர்த்தி சாதனை படைத்துள்ள தமிழகத்தின் சாதனை நட்சத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பங்குசந்தை.சிதம்பரம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கிட 6 கோடி தமிழர்களின் சார்பில் நான் பரிந்துரைக்கிறேன்.

(ஆட்சேபம் தெரிவிக்க உங்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், எல்லா ஆட்சேபனைகளும் தயவு தாட்சன்யமின்றி நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது).