Thursday, November 22, 2007

வாய்ஜாலத்தால் ஒழியுமா வறுமை?

வாய்ஜாலத்தால் ஒழியுமா வறுமை?



'நமது நாடு இப்போதைய வேகத்திலேயே வளர்ச்சிப் பாதையில் சென்றால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் வறுமையைப் பெருமளவு ஒழித்துவிடலாம்' எனப் பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசிய பேச்சுதான் இது.



இப்படிப் பேசுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு திட்டக் கமிஷன் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய அவர், ''அடுத்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்'' என நேரெதிரான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

உணவுக்கு உத்தரவாதமில்லாத நிலைமை உருவாகும் என எச்சரித்துப் பத்தே


நாட்களில், 'வறுமை பெருமளவில் ஒழிந்துவிடும்' என்றால், எதை நம்புவது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.

திட்ட கமிஷன் கூட்டத்தில், ''உணவு உற்பத்தி அவற்றின் விலை, நமது உணவுத் தேவை ஆகியவை எல்லாம் சேர்ந்து அடிப்படையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் அவற்றின் விலையிலும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறது'' என எச்சரித்த பிரதமரின் பேச்சில் அவரது பொருளாதார அறிவும், கரிசனமும் வெளிப்பட்டன.

''இந்த நெருக்கடியை சமா ளிக்க வேண்டுமானால் நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேளாண்மைத் துறை செயல்பட வேண்டியது மட்டுமின்றி, சந்தையின் யதார்த்தத்துக்கு ஏற்றபடி உணவுப் பொருள் தேவையை நாம் தகவமைக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

'Ôபதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (2007&2012) நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது முதல் பத்து சதவிகிதம் வரை இருக்கவேண்டும் என்கிற அதே நேரத்தில், அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்ÕÕ என்றும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். ''2005&ம் ஆண்டு வரை வறுமை ஒழிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை'' என்று கடந்த ஆட்சியை அவர் விமர்சித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகான மூன்று வருடங்களில் இது தொடர்பாக அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு என்ன சாதித்திருக்கிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை! ''அதுபற்றிய புள்ளிவிவரங்கள் இல்லை'' என்று அவரால் மழுப்பத்தான் முடிந்தது.

பொருளாதார மேதை யான நமது பிரதமருக்குப் புள்ளிவிவரங்களைப் பெறு வது ஒன்றும் சிரமமான வேலை இல்லை. வறுமை ஒழிப்பில் நமது நாடு எங்கே இருக்கிறது என்பதற்கான புள்ளிவிவரங்கள் தாராளமாகக் கிடைக்கவே செய்கின்றன.

வாஷிங்டனில் இருக்கும், 'உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்' ஆண்டுதோறும் அட்டவணை ஒன்றை வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள நூற்றுப் பதினெட்டு வளரும் நாடுகளை மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட்டு, அந்த அட்டவணை தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கை, சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவைதான் அந்த மூன்று அளவுகோல்கள்.

இந்தக் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கங்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 'உலக பட்டினி அட்டவணை'யில் இந்தியா தொண்ணூற்று நான்காவது இடத்தில் உள்ளது. ராணுவ சர்வாதிகாரத்தாலும், உள்நாட்டுப் போராலும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானும், இலங்கையும் இந்தியாவைவிட நல்ல நிலைமையில் தமது குடிமக்களை வைத்துள்ளன என்று அந்த அட்டவணை சொல்கிறது.

பட்டினியைக் குறைத்து வறுமையை ஒழிப்பதற்காக ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கில் பாதியைக்கூட இந்தியா எட்டவில்லை என்பதை 2007&ம் ஆண்டுக்கான 'உலக பட்டினி அட்டவணை' வெளிப்படுத்தியுள்ளது.

பிரதமரின் 'ஒன்பது சதவிகித பொருளாதார வளர்ச்சி' என்பது போன்ற கவர்ச்சி அறிவிப்புகளின் பின்னால் இருளில் பதுங்கியிருக்கும் உண்மை இதுதான்! இதைச் சொல்வதற்கு கூச்சப்பட்டுக்கொண்டுதான், 'புள்ளிவிவரம் கிடைக்கவில்லை' என்று உண்மைக்கு மாறான தகவலைத் தந்திருக்கிறார் பிரதமர்.

அத்துடன் நின்றிருந்தால்கூட பரவாயில்லை. அதே காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது இப்படி முழங்குகிறார்&

''நாம் பார்த்துக் கொண் டிருக்கும் பொருளாதார வளர்ச்சி, ஒரு சில பகுதிகளோடு நின்றுவிடவில்லை. நமது முயற்சியின் காரணமாக வேளாண்துறையில் நான்கு சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது... உற்பத்தித் துறையில் பத்து சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது... நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறுமை ஒழிந்து வருகிறது!'' &என்ன ஒரு முரண்பாடு!

பிரதமர் மன்மோகன்சிங்கை நாடு மிகவும் மரியாதையுடன் பார்த்து வருகிறது. அவர் மற்ற அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்பே, ''விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதைத் தொடர முடியாது'' என்று தன் கருத்தைத் தயங்காமல் சொன்ன 'துணிச்சல்காரர்' அவர். திட்ட கமிஷன் கூட்டத்திலும் அப்படித்தான் பேசியிருந்தார். ''உணவு, உரம், பெட்ரோல் ஆகியவற்றுக்குத் தரப்படுகின்ற மானியங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த ஆண்டில் இந்த மூன்றுக்காக மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நாம் செலவிட இருக்கிறோம்'' என்று அவர் கூறியிருந்தார்.

''இந்த மானியங்களால் நமது வளர்ச்சித் திட்டங்கள் எந்த அளவு பாதிக்கப்படுகின்றன என்று பார்க்க வேண்டும். இப்படி மானியங்கள் தருவதால் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை அதிகமாகத் திறக்க முடியாமல் போகிறது. கட்டமைப்பு வசதிகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் போதிய முதலீடுகளைச் செய்ய முடியவில்லை. எனவே, மானியம் வழங்குவதில் இப்போ திருக்கும் ஓட்டைகளை அடைத்து... தகுதியான, ஏழை மக்களுக்கு மட்டும் அதன் பலன்கள் சென்றுசேரும் விதமாக நமது அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டும்'' என்று அவர் பேசியிருந்தார்.

இன்று உலக அளவில் விவாதிக்கப்படும் பிரச்னைகளில் ஒன்றாக 'மானியம்' இருக்கிறது. உலக வர்த்தக அமைப்பு உருவானதற்குப் பிறகு, வளரும் நாடுகளின் சந்தையைக் கபளீகரம் செய்யும் உள்நோக்கத்தோடு அமெரிக்கா முதலான வல்லரசுகள் 'மானியம்' என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகின்றன. சுதந்திர வர்த்தகம் என்ற அனுகூலத்தால் உலகச் சந்தைக்குள் நுழைய வாய்ப்பு பெற்றுள்ள இந்தியா முதலான வளரும் நாடுகள், தமது விவசாய உற்பத்திப் பொருட் களைக் குறைந்த விலைக்கு விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மிகக் குறைந்த கூலி உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செலவு இந்தியா போன்ற நாடுகளில் குறைவு. எனவே, வளர்ந்த நாடுகள் இவற்றோடு போட்டிபோட சிரமப்படுகின்றன. எனவேதான் அந்த நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ஏராளமான மானியங்களை அந்த அரசாங்கங்கள் வழங்குகின்றன. முப்பது பணக்கார நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (ளிணிசிஞி)', தனது உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள் விவசாய மானியங்களைக் குறைப்பதற்கு முன்வர மறுக்கின்றன என்று வெளிப்படையாகவே கூறியுள்ளது. அரிசி, சர்க்கரை, பால், ஆட்டிறைச்சி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஏராளமான மானியங்கள் தரப்படுகின்றன. அமெரிக்க அரசு ஆண்டு ஒன்றுக்கு விவசாயத் துறைக்கு மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மானியம் வழங்கிக் கொண்டிருக்கிறது. பணக்கார நாடுகளின் இந்த இரட்டை அணுகுமுறையை மறைந்த முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

மானியங்களைக் குறைக்க வேண்டும் என்ற உலக வர்த்தக அமைப்பின் கட்டளையை நாம் ஏற்க வேண்டியதில்லை. கூடவே, அரசு தரும் மானியங்கள் உரியவர்களுக்குச் சென்று சேர்வதும் முக்கியம். அந்தவிதத்தில் பிரதமரின் பேச்சு கவனிக்கத்தக்கதாகும். பொது விநியோக அமைப்பு மூலமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கும், பம்பு செட்டுகளுக்கான இலவச மின்சாரத்துக்கும், பெட்ரோலியப் பொருட்களுக்கும் வழங்கப்படுகிற மானியத் தால் பலன் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்கள் மட்டுமல்ல. இன்னும் சொல்லப்போனால், ஏழைகள் மிகவும் குறைவாகவே இவற்றால் பயனடைகின்றார்கள்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த சரியான புள்ளிவிவரம் அரசிடம் கிடை யாது. அதுதான் சமாளிப்புக்கு வசதியென்று அரசாங்கம் கருதுகிறது போலும்!

இருக்கிற புள்ளிவிவரங்களைத் தனது வசதிக்கு ஏற்ப அரசு பயன்படுத்தி வருகிறது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது (1995&96) கோபன்ஹேகனில் நடந்த 'உலக வளர்ச்சிக்கான உச்சி மாநாட்'டில் இந்தியாவில் 39.9 சதவிகிதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப் பதாக இந்திய அரசு தெரிவித்து, கூடுதல் நிதியுதவியை வேண்டியது. ஆனால், தேர்தல் நெருங்கிவந்த சூழலில் ஓட்டு வாங்கும் நோக்கத்தோடு, 'இந்தியாவில் 19.5 சதவிகிதம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். நாங்கள் வறுமையைப் பெருமளவில் ஒழித்து விட்டோம்' என ஊடகங்களில் ஒரு பொய்யை அதே மத்திய அரசு அவிழ்த்து விட்டது!

அப்போது மட்டுமல்ல... இன்றும்கூட அதுவேதான் அரசின் நடைமுறை! கடன் வாங்குவதற்காக ஒரு புள்ளிவிவரம், ஓட்டு வாங்குவதற்காக வேறொன்று!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கென ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மாநில அரசுகள் செலவிடுகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 1500 கோடி ரூபாய்க்கு மேல் இதற்கென ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது. இதனால் பயன்பெறுபவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகள்தான். பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதால் அதைப் பலர் ÔதாராளமாகÕ பயன்படுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் வீணாகிறது என்ற விமர்சனங்கள் உள்ளன. குடிசைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம்தான் நேரடியாக ஏழைகளுக்குப் பயன்படுவதாகும். பெட்ரோலிய பொருட்களுக்கான மானியமும்கூட நேரடியாக ஏழைகளுக்குப் பயனளிப்பதில்லை. ஆகவே இவற்றைப் பரிசீலித்து முறைப்படுத்த வேண்டும்.

நாளன்றுக்கு ஒரு டாலருக்குக் கீழ், அதாவது சுமார் நாற்பத்தைந்து ரூபாய்க்கும் கீழ் வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக உலக வங்கி வரையறுத்துள்ளது. ஆனால் இந்திய அரசோ, நாளன்றுக்கு பத்து ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களைத்தான் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்களெனக் கூறுகிறது. இது எந்தவித நியாயத்துக்குள்ளும் வரவில்லை. எனவே வறுமைக் கோட்டை வரையறுப்பதற்கான சர்வதேச அணுகுமுறையை நமது மத்திய அரசும் பின்பற்ற வேண்டும்.

அரசாங்கங்களின் நலத்திட்டங்களின் பலன்கள் உரியவர்களுக்குப் போய்ச்சேர வேண்டுமெனில், குடிமக்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொருவருடைய சமூக, பொருளாதார, கல்வி தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யலாம். ஒரு அடையாள அட்டை தயாரிக்க பத்து ரூபாய் என வைத்தால்கூட, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க சுமார் 1100 கோடி தேவைப்படலாம். உள்நாட்டுப் பாதுகாப்பு உட்படப் பலவிதங் களில் பயன்படக்கூடியது என்பதால் இந்த செலவு ஒன்றும் வீணானதல்ல. அட்டை தயாரிக்கும்போது நிர்வாக மற்றும் ஊழல் காரணங்களால் தவறான விவரங்கள் பதிவாகாமல் பார்த்துக்கொள்வதுதான்முக்கியம்!

மானியங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். தகுதியான பயனாளி களைக் கண்டறிவதே அதற்குச் சரியான வழி. அடையாள அட்டைதான் இதற்கு நிரந்தரமான தீர்வு!

'வறுமையை ஒழிப்போம்' என்று காங்கிரஸ் கட்சி வெகுகாலமாகவே சொல்லி வருகிறது. வறுமை ஒழியவில்லை... காங்கிரஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கிறது.


நன்றி ஜூனியர் விகடன், 25.11.2007 இதழ்.
கட்டுரையாளர் : ரவிக்குமார் எம்.எல்.ஏ

Thursday, November 15, 2007

123 இந்திய எதிரி

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கக் கப்பல் கொச்சித் துறைமுகம் வந்து சேர்ந்தது. அந்தக் கப்பலில் அமெரிக்கா நமக்கு பரிசுப்பொருட்களை அனுப்பியிருந்தது. துறைமுகப் பணியாளர்கள் திறந்து பார்த்தனர். துர்நாற்றத்தால் அவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது.

தனியார் நிறுவனத்தின் பெயரால் வந்த வாசனைத் திரவியம் என்ன தெரியுமா? நியூயார்க் நகர ஓர்ஆண்டுக் குப்பைகள். அமெரிக்க மருத்துவமனைகளின் அபாயகரமான கழிவுகள். அவற்றை நமது கடலில் கொட்டுவதற்குத்தான் அந்தக் கப்பல் வந்தது. கேரள அரசு எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக அந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. ஆமாம். இந்தியாவை அமெரிக்கா தனது குப்பைத் தொட்டியாகக் கருதுகிறதா?

‘போனால் வராது. பொழுது போனால் கிடைக்காது’ என்று இப்போது அமெரிக்காவிலிருந்து அரசியல் விற்பன்னர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொழிலதிபர்கள் மட்டுமல்ல, வியாபாரிகளும் கூட.

அவர்கள் எதற்காக அலை மோதி வருகிறார்கள்? ‘அய்யா, சாமி... எப்படியாவது அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று மன்றாடுவதற்காக வருகிறார்கள். ஆரம்பத்தில் அமெரிக்காவாழ் இந்திய வம்சாவளித் தொழிலதிபர்கள் வந்தனர். அடுத்து, அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிசிங்கர் வந்தார். அமெரிக்க நிதி அமைச்சர் பால்சன் வந்தார். இன்னும் பல குடுகுடுப்பைக்காரர்கள் வர இருக்கிறார்கள்.

இப்படி வருகிறவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? பி.ஜே.பி. தலைவர் அத்வானி இல்லம் செல்கிறார்கள். ராஜ்நாத் சிங்கைச் சந்திக்கின்றனர். ‘அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை எதிர்க்காதீர்கள். ஆதரவு தாருங்கள்’ என்று மணிக்கணக்கில் வாதம் செய்கிறார்கள்.

‘உடன்பாட்டின் பல அம்சங்கள் இந்திய நலனுக்கு எதிரானவை. அவற்றை நீக்குங்கள்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆனால் நீக்கமாட்டார்கள். அந்த அம்சங்களும் நிபந்தனைகளும் இந்தியாவை அமெரிக்காவின் துணை கிரகமாக்கும் சூத்திரக் கயிறுகளாகும்.

பாவம், டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதர் முல்போர்டு இன்னும் பி.ஜே.பி. கவுன்சிலர்களைத்தான் சந்திக்கவில்லை.

இந்த வாரம் நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைசுடன் தொடர்பு கொண்டார். ‘உடன்பாட்டில் இந்தியாவிற்குப் பாதகமான அம்சங்கள் இருப்பதாக அச்சம் நிலவுகிறது. ஆகவே, உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு அந்த அம்மையார் மறுத்து விட்டார். ‘மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்ட உடன்பாட்டில் இனி எந்த மாற்றமும் இல்லை’ என்று அவர் தெளிவாகத் தெரிவித்து விட்டார்.

எப்படியும் அந்த உடன்பாட்டை இந்தியாவின் தலையில் இறக்கி வைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அமெரிக்க அரசும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, தற்போது தங்கள் நாட்டில் அணுமின் உலைகளை நிறுவுவதில்லை. நியூயார்க் அருகே லாங் ஐலண்டில் அமெரிக்கா அணுமின் உலைகளை நிறுவ முயன்றது. ஆபத்து வாசலுக்கு வருகிறது என்பதனை அறிந்த நியூயார்க் மக்கள், அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போது அந்தத் திட்டம் அரை குறையாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அமெரிக்கா 90 அணு உலைகளை மூடியிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் புதிதாக அணுஉலை தொடங்கப்படவில்லை.

இருக்கவே இருக்கிறது இந்திய குப்பைத் தொட்டி என்று, இப்போது அமெரிக்க மக்கள் புறக்கணிக்கும் அணுமின் உலைகளை இங்கே நிறுவ விரும்புகிறார்கள். அதற்கு மன்மோகன் சிங் வழி வகுத்து விட்டார்.

இப்போது அமெரிக்காவில் அணுமின் உலைகளின் உற்பத்தி பெரிதும் பாதித்திருக்கிறது. அதிலிருந்து மீள்வது மட்டும் அதன் நோக்கம் அல்ல. இன்னும் பல ஆழமான அரசியல் காரணங்கள் உண்டு.

ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு வாங்க, பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் முயன்றார். அதனை அமெரிக்கா அன்றும் எதிர்த்தது. இன்றும் எதிர்க்கிறது. அமெரிக்க நிர்ப்பந்தத்தின் காரணமாக மணிசங்கர் அய்யர் பெட்ரோலியத் துறையை இழந்தார். ஆனாலும் ஈரான் எரிவாயுத் திட்டம் இன்னும் மரித்துவிடவில்லை. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாதே என்று இந்த வாரம் கூட அமெரிக்கா நம்மை எச்சரித்திருக்கிறது. ஏனெனில், எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்வது மலிவு. அணுமின் உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகச் செலவாகும். எனவே, ஈரான் எரிவாயுத் திட்டத்தை முடக்கும் நோக்குடன் அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டைத் துரிதப்படுத்துகிறது. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நிறுத்த முயல்கிறது.

இன்னொரு பக்கம் நமது அணுமின் உற்பத்தித்துறை விஞ்ஞானிகள் ஓசையின்றி அற்புதமான சாதனை செய்து வருகிறார்கள். இந்தியா அணுகுண்டு சோதனை செய்த போது, அமெரிக்கா நமக்கு யுரேனியம் விற்பதை நிறுத்தியது. உடனே நமது விஞ்ஞானிகள் தோரியத்தைப் பயன்படுத்தி அணுமின் உற்பத்தியைத் தொடர்ந்தனர். கல்பாக்கம் அணுமின் நிலையம்கூட தோரியத்தால் இயங்கியது. இதனைக் கண்ணுற்ற பிரெஞ்சு விஞ்ஞானி ‘அணுமின் உற்பத்தியில் புதிய புரட்சி’ என்று பாராட்டினார். உண்மைதான்.

வேறு எந்த நாடும் தோரியத்தைப் பயன்படுத்தி இதுவரை அணுமின் உற்பத்தி செய்யவில்லை. இந்தியாதான் அந்தச் சாதனையைச் செய்தது. ‘இப்போது நமது அணுசக்தித் துறை விஞ்ஞானிகள் அந்த ஆராய்ச்சியில் வெகு தூரம் முன்னேறியிருக்கிறார்கள். நற்பலன்களை அளிக்கும் அந்த ஆராய்ச்சி முழு வெற்றி பெறும்போது இன்னும் ஏழு ஆண்டுகளில் மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்’ என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுகிறார். இப்படி இங்கேயே கற்பகத் தரு வளர வாய்ப்பு இருக்கும் போது, அமெரிக்க எட்டி மரம் நமக்கு எதற்கு?

ஆனால், தோரியத்தைப் பயன்படுத்தி அணுமின் உற்பத்தி செய்யும் இந்தியத் திட்டத்தை அமெரிக்கா முடக்க முயற்சிக்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏதோ நமக்கு மின்சாரம் உற்பத்தி செய்து தருகிற திட்டம் என்றுதான் வெளித்தோற்றத்திற்குத் தெரியும். ஆனால், அந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்க ராணுவக் கூட்டணிக்குள் சுண்டியிழுக்கின்ற சூட்சுமக் கயிறாகும். அதனால்தான் அதனை நாட்டுப்பற்றுள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். இந்திய விஞ்ஞானிகள் எதிர்க்கிறார்கள்.

‘தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணுமின் உலைகளை நம்மால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகளில் நிறுவ முடியும்’ என்கிறார் அப்துல் கலாம். ஆனால், அந்தத் திசையில் இதுவரை மைய அரசு சிந்திக்கவேயில்லை. என்றைக்கு மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றதோ, அந்த நாளிலிருந்து அமெரிக்க அணு உலைகளைத்தான் பாராயணம் செய்து கொண்டிருக்கிறது. சொந்தக் கால்களில் நிற்க நமக்கு வல்லமை இருக்கும்போது, அமெரிக்கா தரும் ரப்பர் கால்களில் நாம் ஏன் நிற்க வேண்டும்?

அடுத்தகட்டமாக அணுசக்தி உடன்பாட்டை ஏற்கிறாயா இல்லையா என்று அமெரிக்கா நம்மை மிரட்டும். ஏதோ அந்த நாட்டின் வழித்தடத்தில் நாம் பயணம் செய்யப் பாத்தியப்பட்டிருக்கிறோம் என்ற தோற்றத்தை மைய அரசே ஏற்படுத்தி விட்டது.

‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற வேண்டுமானால், அமெரிக்க ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வேண்டும்’ என்று கிசிங்கர் சொல்கிறார். ஒப்பந்தம் கைவிடப்பட்டால் நம்பகத்தன்மையே போய்விடும் என்று சிலர் கிசுகிசு பிரசாரம் செய்கிறார்கள். உறுதிமொழியைக் காப்பாற்றாத பிரதமர் என்று மன்மோகன் மீது பழிச் சொல் வரும் என்கிறார்கள்.

நடந்து போன தவறைத் திருத்திக் கொள்ள மைய அரசும் முயற்சிக்கிறது. அதனால்தான் உடன்பாட்டில் சில மாறுதல்களைக் கோருகிறார் பிரணாப் முகர்ஜி.

‘அணுசக்தி உடன்பாட்டோடு பயணம் முடிவதில்லை’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் பெருந்தன்மையோடு கூறியிருக்கிறார். நல்லது. அமெரிக்கா நமக்கு மாட்டியிருக்கும் கறுப்புக் குல்லாவைக் கழற்றி எறிய வேண்டும்.

Saturday, November 3, 2007

ராமர் பாலம் பற்றி தொ.பரமசிவன்

தொன்மை வாய்ந்த ராமர் பாலத்தை இடித்து, சேது சமுத்திரத் திட்டத்தை
அமல்படுத்தக்கூடாது என எதிர்ப்புக்குரல்கள் இப்போது உச்சத்தில்
இருக்கின்றன. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பாலமா, மணல் திட்டா என்ற
விவாதத்தில் தொன்மைகளுக்கு எவ்வளவு தூரம் இடமிருக்கிறது? என தமிழ்ப்பேராசிரியரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள்தமிழ்த்துறை தலைவருமான தொ.பரமசிவனிடம் கேட்டோம்.

''சேது என்பது வடமொழிப் புராணங்களின் படி, இந்தியாவின் தென்எல்லை.
வடவேங்கடத்திலிருந்து தென்குமரி வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைஎன்றெல்லாம் நாம் குறிப்பிடுவதைப் போல பழங்காலத்தில் வடநாட்டவர்கள் பயன்படுத்திய வார்த்தைதான் இது. இந்த எல்லை வரையறை வெறும் புராண மரபுகளின்படிதான் சொல்லப்பட்டு வந்ததே தவிர, இது அறிவியல் ரீதியான முடிவு அல்ல. இமயமலை முதல் சேது வரை உள்ள பகுதிகள்தான் இந்தியா என்றால், சேதுவுக்கு அப்பால் பரந்து விரியும் மதுரை, திருநெல்வேலி_ வைகை, தாமிரபரணி நதிகள் எல்லாம் வேறு நாட்டிலா இருக்கின்றன? அந்தக் காலத்தில் சேதுவைப் பற்றியும் இந்தியாவின் எல்லைகள் பற்றியும் வடநாட்டவர்கள் இப்படித்தான் புரிந்து வைத்திருந்தார்கள்.

புவியியல் ரீதியாக இந்தியாவின் உண்மையான எல்லை குமரிமுனைதான் என்பது 20_ம் நூற்றாண்டில்தான் பெருவாரியான வடஇந்திய மக்களுக்குத் தெரியும்.
இந்தத் தெளிவு பிறப்பதற்கு முன்னால் வடநாட்டவர்களிடம் காணப்பட்ட தவறான நம்பிக்கைகளை இப்போது ராமர் பால விவகாரத்தில் ஆதாரங்களாகக் கொள்வது ஏற்புடையதல்ல. வரலாற்றுக்கு ஆதாரங்கள் உண்டு. தொன்மத்தை மட்டுமே தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவை புராணக்கதைகள். சிவனின் திருமணத்துக்கு வந்த கூட்டத் தைத் தாங்க முடியாமல் வடக்குப்பகுதி தாழ்ந்து, தெற்குப்பகுதி உயர்ந்தது; தென்பகுதியைச் சரி செய்ய அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார்
என்பது வரலாற்றுச் செய்தி அல்ல. இந்தத் தொன்மக் கதையை நாம் உண்மையென்று நம்ப முடியுமா? ராமர் பாலம் கட்டினார் என்ற புராணக் கதையையும் இப்படித்தான் அணுகவேண்டும்.

அது ராமர் பாலமா, மணல் திட்டா என்ற விவாதத்தில் தொன்மங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்தினாலும்கூட, தமிழர்களின் ராமருக்கும் வடநாட்டவரின் ராமருக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கின்றன. கம்பர் எழுதிய ராமாயணம் ராமர் பிறந்ததில் ஆரம்பித்து, அவருக்குப் பட்டாபிஷேகம் நடப்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் வடமொழியில் எழுதப்பட்ட பெரும்பாலான ராமர் கதைகளில் சீதையை நிலம் பிளந்து விழுங்குவதும், ராமர் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதும் தான் முடிவு. ராமர் தற்கொலை செய்துகொள்வதாகக் காட்டுவது நம் மரபுக்கு உவப்பானதாக இருக்காது என்றுதான் கம்பர் அந்த முடிவைப் பயன் படுத்த வில்லை. தமிழில் ராமரின் முடிவைப் பாடிய ஒரே ஒரு புலவர் பாரதியார் மட்டும்தான். 'பலர் புகழும் ராமனுமே ஆற்றில் விழுந்தான், பார் மீதில் நான் சாகாதிருப்பேன் கண்டீர்' என்று பாரதியாரால்தான் பாட முடிந்தது.

தமிழகத்தில் ஒன்றாகவும் வடஇந்தியாவில் இன்னொன்றாகவும் சொல்லப்படும் தொன்மத்தைச் சாட்சியாக ராமர்பாலம் பிரச்னையில் பயன்படுத்த முடியாது'' என்கிறார் தொ. பரமசிவன்..

நன்றி: குமுதம்

Friday, November 2, 2007

ஹென்றி கிஸ்ஸிங்கரின் மிரட்டல்

முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதன் படி உடனடியாக ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயுவை இந்தியா கொணர்வதற்கான திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமாம். ஏனெனில் ஈரான் ஒரு ரவுடி நாடாம். இதை அமெரிக்க காட்டுமிராண்டிகளில் ஒருவர் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இன்னமும் அணுசக்தி உடன்பாடு கையெழுத்துகூட ஆகவில்லை அதற்குள்ளாக இப்படி ஒரு மிரட்டலை அதுவும் ஒரு முன்னாள் செயலாளர் ஒரு இந்திய அமைச்சருக்கு விடுத்துள்ளார். இது வெட்கக்கேடான செயல். இது இந்திய சுயசார்பு கொள்கைகளுக்கு சவால்விடும் செயல்.

அமெரிக்காவின் விருப்பம் இந்தியா என்றென்றும் அமெரிக்காவை சார்ந்தே வாழ்க்கை நடத்த வேண்டுமென்றதே. மானமுள்ள தேசப்பற்றுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் இந்திய ஈரான் எரிவாயு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஆதாரம் : http://www.hindu.com/2007/11/01/stories/2007110162211600.htm