வாய்ஜாலத்தால் ஒழியுமா வறுமை?
'நமது நாடு இப்போதைய வேகத்திலேயே வளர்ச்சிப் பாதையில் சென்றால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் வறுமையைப் பெருமளவு ஒழித்துவிடலாம்' எனப் பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசிய பேச்சுதான் இது.
இப்படிப் பேசுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு திட்டக் கமிஷன் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய அவர், ''அடுத்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்'' என நேரெதிரான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
உணவுக்கு உத்தரவாதமில்லாத நிலைமை உருவாகும் என எச்சரித்துப் பத்தே
நாட்களில், 'வறுமை பெருமளவில் ஒழிந்துவிடும்' என்றால், எதை நம்புவது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.
திட்ட கமிஷன் கூட்டத்தில், ''உணவு உற்பத்தி அவற்றின் விலை, நமது உணவுத் தேவை ஆகியவை எல்லாம் சேர்ந்து அடிப்படையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் அவற்றின் விலையிலும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறது'' என எச்சரித்த பிரதமரின் பேச்சில் அவரது பொருளாதார அறிவும், கரிசனமும் வெளிப்பட்டன.
''இந்த நெருக்கடியை சமா ளிக்க வேண்டுமானால் நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேளாண்மைத் துறை செயல்பட வேண்டியது மட்டுமின்றி, சந்தையின் யதார்த்தத்துக்கு ஏற்றபடி உணவுப் பொருள் தேவையை நாம் தகவமைக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
'Ôபதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (2007&2012) நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது முதல் பத்து சதவிகிதம் வரை இருக்கவேண்டும் என்கிற அதே நேரத்தில், அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்ÕÕ என்றும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். ''2005&ம் ஆண்டு வரை வறுமை ஒழிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை'' என்று கடந்த ஆட்சியை அவர் விமர்சித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகான மூன்று வருடங்களில் இது தொடர்பாக அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு என்ன சாதித்திருக்கிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை! ''அதுபற்றிய புள்ளிவிவரங்கள் இல்லை'' என்று அவரால் மழுப்பத்தான் முடிந்தது.
பொருளாதார மேதை யான நமது பிரதமருக்குப் புள்ளிவிவரங்களைப் பெறு வது ஒன்றும் சிரமமான வேலை இல்லை. வறுமை ஒழிப்பில் நமது நாடு எங்கே இருக்கிறது என்பதற்கான புள்ளிவிவரங்கள் தாராளமாகக் கிடைக்கவே செய்கின்றன.
வாஷிங்டனில் இருக்கும், 'உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்' ஆண்டுதோறும் அட்டவணை ஒன்றை வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள நூற்றுப் பதினெட்டு வளரும் நாடுகளை மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட்டு, அந்த அட்டவணை தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கை, சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவைதான் அந்த மூன்று அளவுகோல்கள்.
இந்தக் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கங்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 'உலக பட்டினி அட்டவணை'யில் இந்தியா தொண்ணூற்று நான்காவது இடத்தில் உள்ளது. ராணுவ சர்வாதிகாரத்தாலும், உள்நாட்டுப் போராலும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானும், இலங்கையும் இந்தியாவைவிட நல்ல நிலைமையில் தமது குடிமக்களை வைத்துள்ளன என்று அந்த அட்டவணை சொல்கிறது.
பட்டினியைக் குறைத்து வறுமையை ஒழிப்பதற்காக ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கில் பாதியைக்கூட இந்தியா எட்டவில்லை என்பதை 2007&ம் ஆண்டுக்கான 'உலக பட்டினி அட்டவணை' வெளிப்படுத்தியுள்ளது.
பிரதமரின் 'ஒன்பது சதவிகித பொருளாதார வளர்ச்சி' என்பது போன்ற கவர்ச்சி அறிவிப்புகளின் பின்னால் இருளில் பதுங்கியிருக்கும் உண்மை இதுதான்! இதைச் சொல்வதற்கு கூச்சப்பட்டுக்கொண்டுதான், 'புள்ளிவிவரம் கிடைக்கவில்லை' என்று உண்மைக்கு மாறான தகவலைத் தந்திருக்கிறார் பிரதமர்.
அத்துடன் நின்றிருந்தால்கூட பரவாயில்லை. அதே காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது இப்படி முழங்குகிறார்&
''நாம் பார்த்துக் கொண் டிருக்கும் பொருளாதார வளர்ச்சி, ஒரு சில பகுதிகளோடு நின்றுவிடவில்லை. நமது முயற்சியின் காரணமாக வேளாண்துறையில் நான்கு சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது... உற்பத்தித் துறையில் பத்து சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது... நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறுமை ஒழிந்து வருகிறது!'' &என்ன ஒரு முரண்பாடு!
பிரதமர் மன்மோகன்சிங்கை நாடு மிகவும் மரியாதையுடன் பார்த்து வருகிறது. அவர் மற்ற அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்பே, ''விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதைத் தொடர முடியாது'' என்று தன் கருத்தைத் தயங்காமல் சொன்ன 'துணிச்சல்காரர்' அவர். திட்ட கமிஷன் கூட்டத்திலும் அப்படித்தான் பேசியிருந்தார். ''உணவு, உரம், பெட்ரோல் ஆகியவற்றுக்குத் தரப்படுகின்ற மானியங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த ஆண்டில் இந்த மூன்றுக்காக மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நாம் செலவிட இருக்கிறோம்'' என்று அவர் கூறியிருந்தார்.
''இந்த மானியங்களால் நமது வளர்ச்சித் திட்டங்கள் எந்த அளவு பாதிக்கப்படுகின்றன என்று பார்க்க வேண்டும். இப்படி மானியங்கள் தருவதால் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை அதிகமாகத் திறக்க முடியாமல் போகிறது. கட்டமைப்பு வசதிகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் போதிய முதலீடுகளைச் செய்ய முடியவில்லை. எனவே, மானியம் வழங்குவதில் இப்போ திருக்கும் ஓட்டைகளை அடைத்து... தகுதியான, ஏழை மக்களுக்கு மட்டும் அதன் பலன்கள் சென்றுசேரும் விதமாக நமது அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டும்'' என்று அவர் பேசியிருந்தார்.
இன்று உலக அளவில் விவாதிக்கப்படும் பிரச்னைகளில் ஒன்றாக 'மானியம்' இருக்கிறது. உலக வர்த்தக அமைப்பு உருவானதற்குப் பிறகு, வளரும் நாடுகளின் சந்தையைக் கபளீகரம் செய்யும் உள்நோக்கத்தோடு அமெரிக்கா முதலான வல்லரசுகள் 'மானியம்' என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகின்றன. சுதந்திர வர்த்தகம் என்ற அனுகூலத்தால் உலகச் சந்தைக்குள் நுழைய வாய்ப்பு பெற்றுள்ள இந்தியா முதலான வளரும் நாடுகள், தமது விவசாய உற்பத்திப் பொருட் களைக் குறைந்த விலைக்கு விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மிகக் குறைந்த கூலி உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செலவு இந்தியா போன்ற நாடுகளில் குறைவு. எனவே, வளர்ந்த நாடுகள் இவற்றோடு போட்டிபோட சிரமப்படுகின்றன. எனவேதான் அந்த நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ஏராளமான மானியங்களை அந்த அரசாங்கங்கள் வழங்குகின்றன. முப்பது பணக்கார நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (ளிணிசிஞி)', தனது உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள் விவசாய மானியங்களைக் குறைப்பதற்கு முன்வர மறுக்கின்றன என்று வெளிப்படையாகவே கூறியுள்ளது. அரிசி, சர்க்கரை, பால், ஆட்டிறைச்சி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஏராளமான மானியங்கள் தரப்படுகின்றன. அமெரிக்க அரசு ஆண்டு ஒன்றுக்கு விவசாயத் துறைக்கு மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மானியம் வழங்கிக் கொண்டிருக்கிறது. பணக்கார நாடுகளின் இந்த இரட்டை அணுகுமுறையை மறைந்த முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்துப் போராடினார்.
மானியங்களைக் குறைக்க வேண்டும் என்ற உலக வர்த்தக அமைப்பின் கட்டளையை நாம் ஏற்க வேண்டியதில்லை. கூடவே, அரசு தரும் மானியங்கள் உரியவர்களுக்குச் சென்று சேர்வதும் முக்கியம். அந்தவிதத்தில் பிரதமரின் பேச்சு கவனிக்கத்தக்கதாகும். பொது விநியோக அமைப்பு மூலமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கும், பம்பு செட்டுகளுக்கான இலவச மின்சாரத்துக்கும், பெட்ரோலியப் பொருட்களுக்கும் வழங்கப்படுகிற மானியத் தால் பலன் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்கள் மட்டுமல்ல. இன்னும் சொல்லப்போனால், ஏழைகள் மிகவும் குறைவாகவே இவற்றால் பயனடைகின்றார்கள்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த சரியான புள்ளிவிவரம் அரசிடம் கிடை யாது. அதுதான் சமாளிப்புக்கு வசதியென்று அரசாங்கம் கருதுகிறது போலும்!
இருக்கிற புள்ளிவிவரங்களைத் தனது வசதிக்கு ஏற்ப அரசு பயன்படுத்தி வருகிறது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது (1995&96) கோபன்ஹேகனில் நடந்த 'உலக வளர்ச்சிக்கான உச்சி மாநாட்'டில் இந்தியாவில் 39.9 சதவிகிதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப் பதாக இந்திய அரசு தெரிவித்து, கூடுதல் நிதியுதவியை வேண்டியது. ஆனால், தேர்தல் நெருங்கிவந்த சூழலில் ஓட்டு வாங்கும் நோக்கத்தோடு, 'இந்தியாவில் 19.5 சதவிகிதம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். நாங்கள் வறுமையைப் பெருமளவில் ஒழித்து விட்டோம்' என ஊடகங்களில் ஒரு பொய்யை அதே மத்திய அரசு அவிழ்த்து விட்டது!
அப்போது மட்டுமல்ல... இன்றும்கூட அதுவேதான் அரசின் நடைமுறை! கடன் வாங்குவதற்காக ஒரு புள்ளிவிவரம், ஓட்டு வாங்குவதற்காக வேறொன்று!
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கென ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மாநில அரசுகள் செலவிடுகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 1500 கோடி ரூபாய்க்கு மேல் இதற்கென ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது. இதனால் பயன்பெறுபவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகள்தான். பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதால் அதைப் பலர் ÔதாராளமாகÕ பயன்படுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் வீணாகிறது என்ற விமர்சனங்கள் உள்ளன. குடிசைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம்தான் நேரடியாக ஏழைகளுக்குப் பயன்படுவதாகும். பெட்ரோலிய பொருட்களுக்கான மானியமும்கூட நேரடியாக ஏழைகளுக்குப் பயனளிப்பதில்லை. ஆகவே இவற்றைப் பரிசீலித்து முறைப்படுத்த வேண்டும்.
நாளன்றுக்கு ஒரு டாலருக்குக் கீழ், அதாவது சுமார் நாற்பத்தைந்து ரூபாய்க்கும் கீழ் வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக உலக வங்கி வரையறுத்துள்ளது. ஆனால் இந்திய அரசோ, நாளன்றுக்கு பத்து ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களைத்தான் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்களெனக் கூறுகிறது. இது எந்தவித நியாயத்துக்குள்ளும் வரவில்லை. எனவே வறுமைக் கோட்டை வரையறுப்பதற்கான சர்வதேச அணுகுமுறையை நமது மத்திய அரசும் பின்பற்ற வேண்டும்.
அரசாங்கங்களின் நலத்திட்டங்களின் பலன்கள் உரியவர்களுக்குப் போய்ச்சேர வேண்டுமெனில், குடிமக்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொருவருடைய சமூக, பொருளாதார, கல்வி தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யலாம். ஒரு அடையாள அட்டை தயாரிக்க பத்து ரூபாய் என வைத்தால்கூட, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க சுமார் 1100 கோடி தேவைப்படலாம். உள்நாட்டுப் பாதுகாப்பு உட்படப் பலவிதங் களில் பயன்படக்கூடியது என்பதால் இந்த செலவு ஒன்றும் வீணானதல்ல. அட்டை தயாரிக்கும்போது நிர்வாக மற்றும் ஊழல் காரணங்களால் தவறான விவரங்கள் பதிவாகாமல் பார்த்துக்கொள்வதுதான்முக்கியம்!
மானியங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். தகுதியான பயனாளி களைக் கண்டறிவதே அதற்குச் சரியான வழி. அடையாள அட்டைதான் இதற்கு நிரந்தரமான தீர்வு!
'வறுமையை ஒழிப்போம்' என்று காங்கிரஸ் கட்சி வெகுகாலமாகவே சொல்லி வருகிறது. வறுமை ஒழியவில்லை... காங்கிரஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கிறது.
நன்றி ஜூனியர் விகடன், 25.11.2007 இதழ்.
கட்டுரையாளர் : ரவிக்குமார் எம்.எல்.ஏ
Thursday, November 22, 2007
வாய்ஜாலத்தால் ஒழியுமா வறுமை?
Posted by
அக்னி சிறகு
at
9:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment