தொன்மை வாய்ந்த ராமர் பாலத்தை இடித்து, சேது சமுத்திரத் திட்டத்தை
அமல்படுத்தக்கூடாது என எதிர்ப்புக்குரல்கள் இப்போது உச்சத்தில்
இருக்கின்றன. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பாலமா, மணல் திட்டா என்ற
விவாதத்தில் தொன்மைகளுக்கு எவ்வளவு தூரம் இடமிருக்கிறது? என தமிழ்ப்பேராசிரியரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள்தமிழ்த்துறை தலைவருமான தொ.பரமசிவனிடம் கேட்டோம்.
''சேது என்பது வடமொழிப் புராணங்களின் படி, இந்தியாவின் தென்எல்லை.
வடவேங்கடத்திலிருந்து தென்குமரி வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைஎன்றெல்லாம் நாம் குறிப்பிடுவதைப் போல பழங்காலத்தில் வடநாட்டவர்கள் பயன்படுத்திய வார்த்தைதான் இது. இந்த எல்லை வரையறை வெறும் புராண மரபுகளின்படிதான் சொல்லப்பட்டு வந்ததே தவிர, இது அறிவியல் ரீதியான முடிவு அல்ல. இமயமலை முதல் சேது வரை உள்ள பகுதிகள்தான் இந்தியா என்றால், சேதுவுக்கு அப்பால் பரந்து விரியும் மதுரை, திருநெல்வேலி_ வைகை, தாமிரபரணி நதிகள் எல்லாம் வேறு நாட்டிலா இருக்கின்றன? அந்தக் காலத்தில் சேதுவைப் பற்றியும் இந்தியாவின் எல்லைகள் பற்றியும் வடநாட்டவர்கள் இப்படித்தான் புரிந்து வைத்திருந்தார்கள்.
புவியியல் ரீதியாக இந்தியாவின் உண்மையான எல்லை குமரிமுனைதான் என்பது 20_ம் நூற்றாண்டில்தான் பெருவாரியான வடஇந்திய மக்களுக்குத் தெரியும்.
இந்தத் தெளிவு பிறப்பதற்கு முன்னால் வடநாட்டவர்களிடம் காணப்பட்ட தவறான நம்பிக்கைகளை இப்போது ராமர் பால விவகாரத்தில் ஆதாரங்களாகக் கொள்வது ஏற்புடையதல்ல. வரலாற்றுக்கு ஆதாரங்கள் உண்டு. தொன்மத்தை மட்டுமே தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவை புராணக்கதைகள். சிவனின் திருமணத்துக்கு வந்த கூட்டத் தைத் தாங்க முடியாமல் வடக்குப்பகுதி தாழ்ந்து, தெற்குப்பகுதி உயர்ந்தது; தென்பகுதியைச் சரி செய்ய அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார்
என்பது வரலாற்றுச் செய்தி அல்ல. இந்தத் தொன்மக் கதையை நாம் உண்மையென்று நம்ப முடியுமா? ராமர் பாலம் கட்டினார் என்ற புராணக் கதையையும் இப்படித்தான் அணுகவேண்டும்.
அது ராமர் பாலமா, மணல் திட்டா என்ற விவாதத்தில் தொன்மங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்தினாலும்கூட, தமிழர்களின் ராமருக்கும் வடநாட்டவரின் ராமருக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கின்றன. கம்பர் எழுதிய ராமாயணம் ராமர் பிறந்ததில் ஆரம்பித்து, அவருக்குப் பட்டாபிஷேகம் நடப்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் வடமொழியில் எழுதப்பட்ட பெரும்பாலான ராமர் கதைகளில் சீதையை நிலம் பிளந்து விழுங்குவதும், ராமர் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதும் தான் முடிவு. ராமர் தற்கொலை செய்துகொள்வதாகக் காட்டுவது நம் மரபுக்கு உவப்பானதாக இருக்காது என்றுதான் கம்பர் அந்த முடிவைப் பயன் படுத்த வில்லை. தமிழில் ராமரின் முடிவைப் பாடிய ஒரே ஒரு புலவர் பாரதியார் மட்டும்தான். 'பலர் புகழும் ராமனுமே ஆற்றில் விழுந்தான், பார் மீதில் நான் சாகாதிருப்பேன் கண்டீர்' என்று பாரதியாரால்தான் பாட முடிந்தது.
தமிழகத்தில் ஒன்றாகவும் வடஇந்தியாவில் இன்னொன்றாகவும் சொல்லப்படும் தொன்மத்தைச் சாட்சியாக ராமர்பாலம் பிரச்னையில் பயன்படுத்த முடியாது'' என்கிறார் தொ. பரமசிவன்..
நன்றி: குமுதம்
Saturday, November 3, 2007
ராமர் பாலம் பற்றி தொ.பரமசிவன்
Posted by
அக்னி சிறகு
at
10:00 AM
Labels: ராமர் பாலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment