Thursday, January 24, 2008

பங்கு சந்தை வீழ்ச்சி

கடந்த ஒரு வாரமாகவே பங்கு சந்தை பலத்த சரிவுக்குள்ளாகி வருகின்றது. நேற்று 10% வரை சரிந்து பின்னர் 3% மீண்டு முடிவில் 7% இழப்பில் முடிந்திருந்தது. நேற்றைய தின துவக்கத்திலேயே 500 புள்ளிகள் இழப்புடன் மும்பை பங்கு சந்தை துவங்கியது. நேரம் செல்ல செல்ல சிறு முதலீட்டாளர்களூம் F & O முதலீட்டாளர்களும் பயத்தின் காரணமாக ஏகத்திற்கும் பங்குகளை விற்க தொடங்க பிற்பகலில் 2100 புள்ளிகள் வரை சரிவடைந்திருந்தது. எனினும் முதலீடு நோக்கில் கடைசி அரை மணி நேரத்தில் 700 புள்ளிகள் உயர்ந்து 1400+ புள்ளிகள் இழப்புடன் முடிந்தது.

இன்று காலை தொடங்கியதுமே முதலீட்டாளர்களின் பயம் காரணமாக எடுத்த எடுப்பில் 2000+ புள்ளிகள்குறைய பங்கு சந்தை சுமார் 1.5 மணிநேரம் தற்காலிகமாக மூட்டப்பட்டது. மேலும் F & O விற்பனையும் நாள் முழுவது நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் எல்லா முதலீட்டாளர்களூம், தரகர்களும் அரசின் தலையீட்டை எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு கடந்த 2 நாட்களாகவே இருக்கின்றது. அரசு தலையிடாததை கண்டித்து எல்லா வலைதளங்களிலும் பதிவர்களும் முதலீட்டாளர்களும் நிதி அமைச்சரை திட்டி தீர்த்தனர். இன்று காலை அதனால் வேறு வழியின்றி நிதியமைச்சர் திருவாய் மலர்ந்தார்.

அதாவது முதலீட்டாளர்கள் பயம் கொள்ள வேண்டாம். தரகர்களுக்கு தேவையான லிக்விடிட்டி வழங்கப்படும். அதற்காக LIC, UTI ஆகிய நிறுவனங்கள் பங்குகளை வாங்கும் என்று அறிவித்தார். அதன் பின்னர் சந்தை சரிவிலிருந்து மீளத்தொடங்கியது.

இதே காங்கிரஸ் அரசில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது 10 வருடங்களுக்கு முன்னர் இதே ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டுமென்று விருப்பம் மிகக்கொண்டு உலக வங்கியின் வலியுறுத்தல் காரணமாக முயற்சித்தார். அதை அந்த நிறுவன தொழிலாளர்களும் முகவர்களும் பெரிய முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டு சென்று 1 கோடி கையெழுத்துகளை மக்களிடம் பெற்று(சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நானும் ஒரு கையெழுத்து போட்டிருக்கின்றேன்.) குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க தனியார் மயம் என்னும் முயற்சியை உடனடியாக அரசு கைவிட்டது. அதன் பின்னர் தனியாரும் காப்பீடு துறையி அனுமதிக்கப்பட்டு ஏராளமான திடீர் நிறுவனங்கள் முளைத்து LIC ஐ சமாளிக்க முடியாமல் விரைவில் காணாமல் போயின(உம். AMP Sanmar). காரணம் அது கடைப்பிடித்த நேர்மை மற்றும் தரமான சேவை. உச்சகட்டமாக ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் காப்பீடு நிறுவனம் மகாராட்டிரத்தில் தடை செய்யப்பட்டதும் நடைபெற்றது.

அன்று LIC என்னும் தங்க முட்டையிடும் வாத்து தனியார் மயம் என்கிற கத்தியால் வெட்டு பட்டிருந்தால் இன்று பங்கு சந்தை காப்பாற்ற ஒரு நிறுவனம் இல்லாமல் போயிருக்கும். அரசும் முதலீட்டாளர்களை கைவிட்டு தனியார் மயத்தை ஒழித்திருக்கும். என்ன செய்ய தனியாரை காக்கவும் அரசு நிறுவனமே தேவை.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கூற்றை அரசு மீண்டும். மெய்ப்பித்திருக்கின்றது. மேலும் சந்தையில் இந்த வீழ்ச்சி தொடருமானால் அரசு நிச்சயம் PF பணத்திலும் கைவைக்க கூடும்.

சந்தையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக இன்று பங்கு தரகள் பரிமாரிக்கொள்ளும் வாசகம்

Reliance On - Market Gone.

பங்கு சந்தை வீழ்ச்சியில் ரிலையன்ஸ் பவர் ஐபிஓவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுதான் வீழ்ச்சியை துவக்கி வைத்தது. ஆரம்பத்தில் முதல் நாளிலெயே 10 மடங்கு விண்ணப்பங்கள் குவிய அப்பொழுது உடனடியாக பங்கு சந்தை.சிதம்பரம் நாட்டின் அடிப்படை மிகவும் வலிமையாக இருக்கின்றது என்று மார்தட்டினார். அவருடைய நம்பிக்கை இரண்டு நாட்களில் அவநம்பிக்கையாகிவிடும் என்று அப்பொழுது அவர் உணர்ந்திருக்க மாட்டார்.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய எல்லா முதலீட்டாளர்களும் பணத்தை பங்கு சந்தையிலிருந்து எடுக்க தொடங்கியதால் முதல் கட்ட வீழ்ச்சி தொடங்கியது. அதை இறுதி மூச்சில் இருக்கும் அமெரிக்க பொருளாதாரம் தன்பங்கிற்கு உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதனால் வெளிநாட்டு முதலீடு ஏகத்திற்கும் சந்தையிலிருந்ந்து திரும்பபெறப்பட்டது. இதனாலும் சந்தை சரிந்தது. சந்தை சரிவிற்கு முன்னர்தான் ரிலையன்ஸ் பவர் 79 மடங்கு விண்ணப்பம் பெற்றதாகவும் அது சாதனை என்றும் அனில் அம்பானி உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்றும் பத்திரிகைகள் பரபரத்தன. எல்லாமே 2 நாட்கள்தான்.

பங்குச் சந்தை இந்த அனில் அம்பானியை இன்று 1000+ இடத்திற்கும் முகேஷ் அம்பானியை 101 வது இடத்திற்கும் டி.எல்.எஃப். உரிமையளர் கே.பி.சிங்கை 250 ஆவது இடத்திற்கும் உலக அளவில் அழைத்து சென்றுள்ளது. இதன் உச்சமாக ரிலையன்ஸ் பவர் பங்கு கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுது செக்குகளுக்கு ஸ்டாப் பேமண்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன(இதை வதந்தி என்று அனில் அம்பானி கூறியுள்ளார்). இதிலும் ரிலையன்ஸ் சாதனை படைக்கும் என்று நம்பலாம். லிஸ்டிங்கில் 1000 ரூபாய்க்கும் மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் பவர் இப்பொழுது ஒளியிழந்து 450க்காவது வெளியாகுமா இல்லை இன்னும் கீழே வெளியாகுமா என்று எதிர்பார்க்கும் அளவில் உள்ளது.( 16.01.2008 அன்றே கிரே மார்கெட் பிரீமியம் என்றழைக்கப்படும் தொகை 470 இலிருந்து 420 ஆகவும், வெளியீட்டின் இறுதி நாளன்று 320 ஆகவும் நேற்று 150 ஆகவும் தேயந்து போனதிலும் ரிலையன்ஸ் பவர் சாதனை புரிந்துள்ளது.)

இன்றைய பங்கு மார்கெட் வார்த்தை Reliance Power On - India Gone.(இது ரிலையன்ஸ் பவர் விளம்பரங்களில் Riliance Power On - India On என்று வரும்).

விரைவில் அமெரிக்கா பொருளாதார சரிவை(Recession) அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அது அமெரிக்க தேர்தலுக்கு பிறகாவது அறிவிக்கப்படும். அப்பொழுது சந்தை மேலும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நலம் என்பதே இறுதி நீதி.

0 comments: