Sunday, September 30, 2007

கியூபா வழியில் கேரளம்

இது 10.10.2007 பசுமை விகடனில் வந்த கட்டுரை.


இனி இயற்கை விவசாயம்தான்...

க்யூபா வழியில் கேரளா!

சரியான திட்டமிடலே பாதிவெற்றிக்குச் சமம் என்பார்கள். அந்த வகையில் தெள்ளத்தெளிவான கொள்கைகளுடன் அதிகாரப்பூர்வமாக இயற்கை விவசாயம் என்கிற பாதையில் வேகமாக அடி எடுத்து வைத்திருக்கிறது கேரள மாநிலம்.



கம்யூனிஸ தேசமான க்யூபா, ஒரு பக்கம் அமெரிக்கா வின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், முழுக்க இயற்கை விவசாயம் என்பதையும் கையில் எடுத்துக் கொண்டு உலகையே வியக்க வைத்துக்கொண்டுள்ளது. அதேபாணியில், இங்கே கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்திலும் இனி இயற்கை விவசாயம்தான் எங்கள் கொள்கை என்று வீரமுழக்கமிட்டிருக்கிறார் மாநில முதல்வர் அச்சுதானந்தன்.


மாநிலத்தின் இயற்கை விவசாயக் கொள்கையை வடிவமைக்கும் வகையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது மாநில பயோ டைவர்சிட்டி போர்டு. இதற்காக தமிழகம், கர்நாடகம் உட்பட இந்தியா முழுக்கவிருந்து இயற்கை விவசாய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி யாளர்களும் அங்கே குவிந்தனர்.

காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மாநில முதல்வர் அச்சுதானந்தன் வந்து சேரவில்லை. சரி, நிகழ்ச்சி நடந்த மாதிரிதான் என்று நாம் நினைத்தால்... சட்டென்று கூட்டத்தை துவக்கிவிட்டனர் ஏற்பாட்டாளர்கள்.

எல்லோரையும் வரவேற்றுப் பேசிய, பயோ டைவர்சிட்டி போர்டு தலைவர் விஜயன், இந்தியாவிலேயே முதல் முறையாக பல்லுயிர் சூழலைப் பாதுகாக்க பயோ டைவர்சிட்டி போர்டு என்கிற அமைப்பு கேரளா மாநிலத்தில்தான் தொடங்கப்பட்டது. இயற்கை அளித்தவற்றையெல்லாம் வறட்டு கௌரவத்துக்காக நாம் அழித்துவிடக் கூடாது. பாரம்பரியமான விவசாய முறைகளையும், லாபம் தரும் தொழில்நுட்பங்களையும் விவசாயி களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இயற்கை விவசாயம் என்ற பாதையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் விரைந்துகொண்டுள்ளன. அதேபோல கேரளாவிலும் இயற்கை விவசாயத்தை விரைவுபடுத் துவதற்காக நம்முடைய முதல் அமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் எல்லா வகையிலும் உதவிகளை வழங்கிவருகிறார்கள்’’ என்று பேசிக்கொண்டிருக்கும் போதே முதல்வர் அச்சுதானந்தன் மேடைக்கு வந்து சேர்ந்தார்.

(போலீஸாரின் பூட்ஸ் சத்தம்... அதிகாரிகளின் பரபரப்புக் குரல்கள்... தொண்டர்களின் உற்சாகக் கூச்சல் என்று எதுவும் இல்லாமல் ஏதோ தெருமுனை டீ கடைக்கு பேப்பர் படிக்க வந்தவர் போல் தனி ஆளாக அவர் வந்து சேர்ந்ததது... தமிழகத்திலிருந்து போயிருந்த நமக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவே செய்தது).

உடனடியாக மைக் பிடித்த முதல்வர், ‘‘இந்தியாவில் இயற்கை விவசாயம் என்றால்... கேரளா என்று சொல்லும் நிலை ஏற்படவேண்டும். நம் மாநிலத்தில் உள்ள மண்ணையும், மக்களையும் காப்பாற்ற இயற்கை விவசாயம்தான் ஒரேவழி. பல நுறு ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த பாரம்பரியங்கள் அழியத் தொடங்கியுள்ளன. பொக்காலி நெல்லும், செம்மீனும் இன்று போன இடம் தெரியவில்லை. மண், காற்று, நீர் என எல்லா இடங்களிலும் விஷம் கலந்துவிட்டது. இதை நினைத்தால் வேதனையில் நெஞ்சு விம்முகிறது. விஷமில்லாத மாநிலமாக கேரளத்தை உருவாக்க எல்லாவகையிலும் என்னுடைய பங்கு நிச்சயம் இருக்கும்.


இனி விவசாயம் ஜெயிக்குமா? என்று இந்தியா முழுக்கவே விவசாயிகளிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் தைரியம் கொடுத்து, நம்பிக்கையை உண்டாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் தொழில் நுட்பத்தையும் கேரளா வுக்குள் அனுமதிக்க மாட்டோம். பி.டி. எனப்படும் மரபணு மாற்று விதைகள் சூழலுக்கு வேட்டு வைக்கக்கூடியவை. மறந்தும் கூட அதை எங்கள் எல்லையில் நுழைய விடமாட்டோம் என்று முழங்கிய முதல்வர் அச்சுதானந்தன்,

அறிஞர் பெருமக்கள் எல்லாம் இரண்டு நாட்களாக இங்கே ஆலோசனை நடத்தி, வகுத்து தரவிருக்கும் இயற்கை விவசாயக் கொள்கைகளை அமல்படுத்த நான் தயராக இருக்கிறேன்’ என்று உறுதிகூறி அமர்ந்தார்.

அடுத்து, டெல்லியில் இயங்கிவரும், உயிரி தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு என்ற அமைப்பை சேர்ந்த டாக்டர் தேவேந்தர் சர்மா... ‘‘நாடு முழுக்க கடன் தொல்லை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதைத் தடுக்க அரசுத் தரப்பில் எந்தவிதக் கூட்டமும் நடைபெறவில்லை. ஆனால், மரபணு மாற்றபட்ட விதைகளை எப்படி விவசாயிகளின் தலையில் கட்டுவது என்று விஞ்ஞானிகளும், அரசு அதிகாரி களும் கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டே இருக் கிறார்கள்’’ என்று அரங்கை அதிரவைத்தார்.

இரண்டாம் நாள் காலையில் தமிழகத்தில் நடக்கும இயற்கை விவசாயம் குறித்து படங்களுடன் பேசத் தொடங்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.

‘‘தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நிலத்தையே ஆராய்ச்சிக் கூடமாக்கி, புதுப்புதுக் கண்டுபிடிப்பு களை செய்து வருகிறார்கள். இயற்கை விவசாயம் மாநிலம் முழுக்க விவசாயிகளால் ஓர் இயக்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஒற்றை நாற்று நடவு என்பதை எங்கள் மாநிலத்தில் ஒரு புரட்சியாகவே செய்து வருகிறார்கள். ஒரு தூரில் 100 கிளைகள் வெடிக்கின்றன. இதிலிருந்து 250 கிராம் நெல் மணிகள் விளைந்திருக்கின்றன. இந்த அதிசயத்தை நாகப்பட்டிணத்தில் உள்ள விவசாயி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

ரசாயன இடுபொருட்கள் இல்லாமல் இயற்கை முறையிலேயே விளைச்சலைக் கூட்டு வதற்கு ஏராளமான தொழில்நுட்பங்கள் கைவசம் உள்ளன. அமுதபானி (அமிர்த கரைசல்) பஞ்சகவ்யா, இ.எம். பூச்சிவிரட்டி என்று நிறைய இருக்கின்றன. எல்லா வற்றையும் விவசாயிகளே தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள்’’ என்று சுருக் கமாகப் பேசியவர், இயற்கை விவசாயத்தில் வெற்றிப்பெற்ற தமிழக விவசாயிகளின் புகைப்படம் மற்றும் வீடியோ படங்களைக் காட்டிவிட்டு அமர்ந்தார் நம்மாழ்வார்

பெங்களூரு, காந்தி வேளான் அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர்.பிரகாஷ் பேசும்போது, ‘இந்தியாவில் முதல் முறையாக இயற்கை விவசாயக் கொள்கையை 1995ம் ஆண்டே கர்நாடகா அரசு செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. எங்கள் அரசு, இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு செல்வதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங் களோடு சேர்ந்து வேலை செய்கிறது. ஒவ்வொரு தாலூகாவிலும் ஒரு விவசாயப் பண்ணையை உருவாக்கி வருகிறது அரசு. அங்கே இயற்கை முறையில் விளைவிக் கப்பட்ட பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வதற்காக பெங்களூருவி லிருக்கும் லால்பாக் பூங்காவில் ஒரு கடை தனியாக செயல்பட்டு வருகிறது. முழுக்க இயற்கை விவசாயம் சார்ந்த மாநிலமாக கர்நாடகாவை மாற்றுவதற்கு எல்லா வகையிலும் மாநில அரசு நடவடிககை எடுத்து வருகிறது என்று சொல்லி கூட்டத்தினர் அனைவரையும் வியக்க வைத்தார்.

இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில், ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மாடு, ஒரு எருமை ஆகியவற்றை வழங்கவேண்டும் என்பது தொடங்கி, ரசாயன உரம் மற்றும் மருந்துகள் விற்பனை செய்வதையும், தெளிப்பதையும் மாநிலத்தில் முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்பது உட்பட 24 வகையான கொள்கைகள் உருவாக்கப் பட்டன.

எல்லாவற்றையும் செயல்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று முதல் நாள் காலையிலேயே முதல்வர் அச்சுதானந்தன் பச்சைக்கொடி காட்டிவிட்டுச் சென்றதால், அடுத்த வரும் ஆண்டுகளில் கேரள மாநிலம் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கப் போகிறது என்ற நம்பிக்கையோடு அனைவரும் கலைந்தனர்.

கடைசியாக நம்மிடம் பேசிய நம்மாழ்வார், இங்கே அரசே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே நம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலாவது அரசு விழித்துக் கொண்டால், இந்தியாவிலேயே இயற்கை விவசாயத்தில் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் தட்டிச்சென்றுவிடும் என்று ஆதங்கத்துடன் சொன்னவர்,

அரசு இறங்கி வராவிட்டாலும் விவசாயி களே இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதைச் சாதித்துவிடுவார்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

2 comments:

இரா.சுகுமாரன் said...

நல்ல தகவல்களை அளித்தமைக்கு நன்றிகள்

கபீஷ் said...

// இரா.சுகுமாரன் said...
நல்ல தகவல்களை அளித்தமைக்கு நன்றிகள்

//

வழிமொழிகிறேன்.